தருமபுரி | டிசம்பர் 29:
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக அதியன் கூட்டரங்கில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ரெ.சதீஸ், இ.ஆ.ப. அவர்கள் தலைமையில் இன்று (29.12.2025) நடைபெற்றது. இந்த கூட்டத்தில், பொதுமக்களிடமிருந்து மொத்தம் 464 கோரிக்கை மனுக்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் பெற்றுக்கொண்டார். இதில் சாலை வசதி, குடிநீர் வசதி, பேருந்து வசதி, பட்டா கோரிக்கை, சிட்டா பெயர் மாற்றம், புதிய குடும்ப அட்டை, வாரிசு சான்றிதழ், வேலைவாய்ப்பு, இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் ஓய்வூதியம், மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை மற்றும் உபகரணங்கள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் இடம் பெற்றிருந்தன.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின்படி, பொதுமக்கள் அளிக்கும் மனுக்களுக்கு விரைந்து தீர்வு காண வேண்டும் என அனைத்து துறை அலுவலர்களுக்கும் மாவட்ட ஆட்சித்தலைவர் உத்தரவிட்டார். பெறப்பட்ட மனுக்கள் அனைத்தும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கப்பட்டு, அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு தகுதியான மனுக்களுக்கு உடனடியாக தீர்வு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.
மேலும், தருமபுரி மாவட்டத்தில் 24.02.2025 அன்று ஏற்பட்ட பட்டாசு தொழிற்சாலை வெடி விபத்தில் உயிரிழந்த 3 தொழிலாளர்களின் குடும்பங்களைச் சேர்ந்த 6 குழந்தைகளுக்கு, தலா மாதந்தோறும் ரூ.2,000 வழங்குவதற்கான மாதாந்திர பராமரிப்பு கல்வி உதவித் தொகை ஆணைகள் மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.
இந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி கவிதா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திருமதி கவிதா, துணை இயக்குநர் (தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் சுகாதாரம்) திருமதி பூவிதா, தனித்துணை ஆட்சியர் (Fund) திரு. திருசுப்பிரமணியன், உள்ளிட்ட பல்வேறு அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு நேரடி அணுகுமுறையில் தீர்வு காணும் இந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

.jpg)