Type Here to Get Search Results !

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: பயிர் சாகுபடி, விதை–உரம் இருப்பு நிலவரம் குறித்து ஆட்சியர் விளக்கம்.


தருமபுரி, டிச.19:

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக அதியன் கூட்டரங்கில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரெ.சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (19.12.2025) நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஆண்டிற்கான பயிர் மகசூல் போட்டியில் வெற்றி பெற்ற ஐந்து விவசாயிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் பாராட்டு சான்றிதழ்களை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.


கூட்டத்தில் உரையாற்றிய மாவட்ட ஆட்சித்தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி விவசாயிகளின் பொருளாதார மேம்பாட்டிற்காக அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருவதாகவும், அவற்றை முழுமையாக விவசாயிகளிடம் கொண்டு சேர்க்க மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.


தருமபுரி மாவட்டத்தில் ஜனவரி முதல் டிசம்பர் 2025 வரையிலான காலத்திற்கு இயல்பான மழையளவு 942.00 மில்லி மீட்டராகும். ஆனால், 2025 டிசம்பர் வரை 689.93 மில்லி மீட்டர் மழை மட்டுமே பதிவாகியுள்ளது. 2025–2026 ஆம் ஆண்டிற்காக உணவு தானியங்கள், சிறுதானியங்கள், பயறு வகைகள், எண்ணெய் விதைகள், பருத்தி, கரும்பு உள்ளிட்ட பயிர்களுக்காக 2,03,030 ஹெக்டேர் பரப்பளவில் இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில், 17.12.2025 வரை 1,42,232 ஹெக்டேர் பரப்பளவில் சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.


நெல், சிறுதானியங்கள், பயறு வகைகள் மற்றும் எண்ணெய் விதைகளுக்கான விதை இருப்பு, அனைத்து வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களிலும் போதிய அளவில் உள்ளதாகவும், விவசாயிகள் தேவையான விதைகளை நேரடியாக பெற்றுக் கொள்ளலாம் என்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார். அதேபோல், 2025–26 ஆம் ஆண்டிற்கான உரத் தேவையாக 41,030 மெட்ரிக் டன் கணக்கிடப்பட்டுள்ள நிலையில், யூரியா, டிஏபி, பொட்டாஷ் உள்ளிட்ட உரங்கள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் மற்றும் தனியார் விற்பனை நிலையங்களில் போதிய இருப்பில் வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.


இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்கும் வகையில் உயிர் உரங்களும் தேவையான அளவில் இருப்பில் உள்ளதாகவும், திருத்தப்பட்ட பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் 7,510 விவசாயிகள் சுமார் 69,971.7 ஏக்கர் பரப்பளவில் பயிர் காப்பீடு செய்துள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் மூலம் பழங்கள், காய்கறிகள், பூக்கள் உள்ளிட்ட பயிர்கள் பெருமளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளன எனவும் கூறப்பட்டது.


கூட்டுறவுத் துறையின் மூலம் நெல், கரும்பு, எண்ணெய் விதைகள் உள்ளிட்ட பல்வேறு பயிர்களுக்கு ஆயிரக்கணக்கான விவசாயிகளுக்கு பயிர் கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், மாவட்டத்தில் செயல்படும் கூட்டுறவு சர்க்கரை ஆலைகளில் சர்க்கரை இருப்பு நிலவரம் குறித்தும் மாவட்ட ஆட்சித்தலைவர் விளக்கினார்.


இக்கூட்டத்தில் பல்வேறு துறை அலுவலர்கள் துறை வாரியான திட்டங்கள் குறித்து விளக்க உரையாற்றினர். விவசாயிகளிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. விவசாயிகளின் உற்பத்தி மற்றும் வருமானம் உயர்வதற்காக அரசு செயல்படுத்தும் அனைத்து வேளாண் நலத்திட்டங்களும் தகுதியான அனைவருக்கும் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும் ஆட்சித்தலைவர் வலியுறுத்தினார்.


முன்னதாக, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட நிர்வாகம், கோத்தாரி இண்டஸ்ட்ரியல் கார்ப்பரேஷன் லிமிடெட் மற்றும் எக்ஸ்னோரா பசுமை தமிழ்நாடு இயக்கம் இணைந்து மேற்கொண்ட மரக்கன்று நடும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் தொடங்கி வைத்தார்.


இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி கவிதா, கூட்டுறவு மற்றும் வேளாண்மை துறை உயர் அலுவலர்கள், சர்க்கரை ஆலை நிர்வாகிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் திரளான விவசாயிகள் கலந்து கொண்டனர்.


© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies