தருமபுரி, டிசம்பர் 20:
தருமபுரி மாவட்டம் தொன் போஸ்கோ கல்லூரி, சோகத்தூரில் நடைபெற்ற மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் தேர்வு செய்யப்பட்ட 871 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள், மாவட்ட ஆட்சித்தலைவர் ரெ. சதீஸ், இ.ஆ.ப. அவர்கள், தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. மணி அவர்கள் முன்னிலையில் இன்று வழங்கினார்.
இந்த முகாம், மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு (ம) தொழில்நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு மாநில ஊரக (ம) நகர்புற வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்) மற்றும் தொன் போஸ்கோ கல்லூரி இணைந்து நடத்தப்பட்டது.
மாவட்ட ஆட்சித்தலைவர் ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் உரையாற்றுகையில், படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் அரசு வேலைக்காக மட்டுமே காத்திராமல், தனியார்துறை நிறுவனங்களில் வேலைவாய்ப்புகளைப் பெறும் வகையில், மாவட்ட வேலைவாய்ப்பு (ம) தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் மாதந்தோறும் சிறிய முகாம்களும், வருடத்திற்கு இரண்டு மாபெரும் முகாம்களும் நடத்தப்பட்டு வருவதாக தெரிவித்தார். இதன் மூலம் தனிநபர் முன்னேற்றம், சமூக முன்னேற்றம் மற்றும் பொருளாதார மேம்பாடு எட்டப்படுவதாக கூறினார்.
மேலும், தருமபுரி மாவட்டத்தின் அதகபாடி பகுதியில் 1,733 ஏக்கர் பரப்பளவில் புதிய தொழில் பூங்கா (SIPCOT) அமைக்கப்பட உள்ளதாகவும், OLA, Ather Energy, TVS, Titan, e-Man Automotives உள்ளிட்ட முன்னணி நிறுவனங்கள் ஆலை அமைக்க விருப்பம் தெரிவித்துள்ளன எனவும் கூறினார். இதன் மூலம் மாவட்டத்தில் பல்லாயிரக்கணக்கான வேலைவாய்ப்புகள் உருவாகி, வெளிமாவட்டம் மற்றும் வெளிமாநிலங்களுக்கு வேலை தேடி செல்லும் நிலை குறையும் என்றார்.
வேலைவாய்ப்பு விவரங்கள்
-
05.10.2024 முதல் 26.07.2025 வரை நடைபெற்ற மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்களில்
-
பங்கேற்றோர்: 7,075
-
வேலைவாய்ப்பு பெற்றோர்: 1,570
-
-
இன்றைய முகாமில்
-
பங்கேற்ற வேலைநாடுநர்கள் (மாற்றுத்திறனாளிகள் உட்பட): 2,838
-
பங்கேற்ற நிறுவனங்கள்: 137 (பெங்களூரு, சென்னை, கோவை, திருச்சி, கிருஷ்ணகிரி, சேலம் உள்ளிட்ட மாவட்டங்கள்)
-
வேலைவாய்ப்பு பெற்றோர்: 871 (இதில் 5 மாற்றுத்திறனாளிகள்)
-
இளைஞர்கள் வேலைவாய்ப்புகள் குறித்த விழிப்புணர்வை பெற்று, அறிவும் திறனும் வளர்த்துக் கொண்டு, தனியார்துறையிலும் போட்டித் தேர்வுகளிலும் வெற்றி பெற்று வாழ்க்கை தரத்தை உயர்த்த வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் வலியுறுத்தினார். தொடர்ந்து, Indian Bank பயிற்சி நிறைவு பெற்றவர்களுக்கு சான்றிதழ்களையும் மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.

.jpg)