தருமபுரி – டிசம்பர் 26
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக குறிஞ்சி கூட்டரங்கில், மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை சார்பில் மாவட்ட அளவிலான உணவு பாதுகாப்பு ஆலோசனைக் குழு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ரெ.சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், தருமபுரி மாவட்டத்தில் உணவு பாதுகாப்புத்துறையின் செயல்பாடுகள் குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டது. மாவட்டத்தில் இயங்கும் உணவகங்களில் தடை செய்யப்பட்ட நெகிழிப் பைகளில் உணவுப் பொருட்கள் வழங்கக் கூடாது என்றும், அதற்குப் பதிலாக சுற்றுச்சூழலுக்கு ஏற்ற மாற்று ஏற்பாடுகள் குறித்து பொதுமக்கள் மற்றும் வணிகர்களுக்கு விழிப்புணர்வு வழங்க வேண்டும் என்றும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
மேலும், பழைய இறைச்சி மற்றும் அசைவ உணவுப் பொருட்களை குளிர்சாதனப் பெட்டிகளில் வைத்து மீண்டும் பயன்படுத்தக் கூடாது என்றும், மாவட்டம் முழுவதும் தீவிர ஆய்வுகள் மேற்கொண்டு கெட்டுப்போன இறைச்சி பயன்படுத்தப்படவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் உத்தரவிட்டார்.
அதேபோல்,
-
டீ, காபி, சாம்பார், இரசம் போன்ற சூடான திரவங்களை நெகிழி கவர்களில் பார்சல் செய்யக் கூடாது,
-
எண்ணெய் உணவுப் பொருட்களை பரிமாற அல்லது பொட்டலமிட செய்தித்தாள் மற்றும் அச்சிடப்பட்ட காகிதங்களை பயன்படுத்தக் கூடாது,
-
அரசு மருத்துவமனைகள், அரசு மருத்துவக் கல்லூரிகள், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு அருகிலுள்ள டீ கடைகள், உணவகங்களில் தொடர்ச்சியான ஆய்வு மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்,
-
பேக்கரிகளில் கேக் மீது பயன்படுத்தப்படும் Butter Paper (வெண்ணெய் காகிதம்) பயன்படுத்தக் கூடாது
என பல்வேறு முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கினார்.
மேலும், உணவு பொருட்கள் தொடர்பான புகார்கள் இருப்பின் பொதுமக்கள்
-
9444042322 என்ற வாட்ஸ் ஆப் எண்ணுக்கு,
-
TN Food Safety Consumer App செயலி மூலம்,
-
foodsafety.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம்
புகார் அளிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.
இந்த கூட்டத்தில், மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் மரு. P.K. கைலாஷ்குமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) திருமதி. சுமதி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் திரு. வெ. லோகநாதன், மாவட்ட சமூக நல அலுவலர் திருமதி. கலாவதி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் திருமதி. பவித்ரா, ஓட்டல் உரிமையாளர்கள் சங்கம், நுகர்வோர் அமைப்புகள், நகர வர்த்தகர் சங்கம், விநியோகிப்பாளர் சங்கத்தினர் மற்றும் ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர்கள் திரு. K. நந்தகோபால், திரு. M. திருப்பதி, திரு. M. சரண்குமார், திரு. V. அருண் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

.jpg)