தருமபுரி, டிச. 20:
தருமபுரி பேருந்து நிலையத்தில், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (சேலம்) – தருமபுரி மண்டலம் சார்பில், மகளிர் விடியல் பயணம் மேற்கொண்டு வந்த பழைய பேருந்துகளுக்கு மாற்றாக 7 வழித்தடங்களில் புதிய பேருந்து சேவைகள் இன்று தொடங்கப்பட்டன. இந்த சேவைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள், தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. மணி அவர்கள் முன்னிலையில் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் உரையாற்றும்போது, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான அரசு பொறுப்பேற்றதிலிருந்து கடந்த நான்கு ஆண்டுகளில், தருமபுரி மண்டலத்தில் 6 புதிய வழித்தடங்களும், 108 வழித்தட நீட்டிப்பு மற்றும் வழித்தட மாற்றங்களும் செய்யப்பட்டு, மொத்தம் 114 வழித்தடங்களில் 127 பேருந்துகள் இயக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். இதன் மூலம் 295 கிராமங்கள் மற்றும் நகரங்களில் இருந்து பள்ளி, கல்லூரி மாணவ–மாணவியர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட சுமார் 2,78,157 பேர் பேருந்து வசதி பெற்று பயனடைந்து வருவதாகவும் கூறினார்.
மேலும், பழைய பேருந்துகளுக்கு மாற்றாக 31 புதிய பேருந்துகள் மற்றும் 53 புனரமைப்பு பேருந்துகள் என மொத்தம் 84 பேருந்துகள் இயக்கப்பட்டு வருவதாகவும், மகளிர் விடியல் பயண நகர்ப்பேருந்துகளுக்கு மாற்றாக 35 புதிய பேருந்துகள் மற்றும் 26 புனரமைப்பு பேருந்துகள் என மொத்தம் 61 பேருந்துகள், கூடுதலாக ஒரு புதிய தாழ்தள (Low Floor) பேருந்தும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு இயக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். இந்நிலையில், இன்று தருமபுரி பேருந்து நிலையத்தில் மகளிர் விடியல் பயணம் மேற்கொண்டு வந்த பழைய பேருந்துகளுக்கு மாற்றாக 7 வழித்தடங்களில் புதிய பேருந்துகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில் தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி. வெங்கடேஷ்வரன், தருமபுரி நகர மன்ற தலைவர் லட்சுமி நாட்டான் மாது, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பொது மேலாளர் (சேலம்) த. மோகன்குமார், இந்நாள் மற்றும் முன்னாள் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு துறை அலுவலர்கள் மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

.jpg)