தருமபுரி. டிச.20:
தருமபுரியைச் சேர்ந்த வழக்கறிஞர் மாதேஸ்வரன் அவர்களுக்கு ஏற்பட்டுள்ள அநீதியான அனுபவம், தகவல் அறியும் உரிமைச் சட்டம் (RTI) 2005 நடைமுறையில் அரசு அதிகாரிகள் காட்டும் அலட்சியத்தை வெளிச்சம் போட்டு காட்டுகிறது. பட்டா வழங்கலில் நடந்ததாக கூறப்படும் முறைகேடுகள் தொடர்பாக, சட்டப்படி தகவல் கேட்டு மனு அளித்தும், நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் எந்த பதிலும் வழங்கப்படாதது, தொடர்ந்து மேல்முறையீடுகளுக்கும் பதில் இல்லாதது ஆகியவை சட்டத்தின் அடிப்படை நோக்கத்தையே கேள்விக்குறியாக மாற்றியுள்ளது.
RTI சட்டத்தை நன்கு அறிந்த ஒரு வழக்கறிஞரே, அரசு அலுவலகங்களில் அலைய வேண்டிய சூழ்நிலையும், அதிகாரிகள் பணி மாறுதல் பெற்றுவிடுவதால் பொறுப்பு யாருக்கு என்றே தெரியாத நிலையும் சந்திக்க வேண்டியிருப்பது, நிர்வாக இயந்திரத்தின் செயலிழப்பை காட்டுகிறது. முதல் முறையீடு, இரண்டாம் முறையீடு என சட்டப்படி அனைத்து நடைமுறைகளையும் பின்பற்றிய பின்னரும், மாநில தகவல் ஆணையத்தில் வழக்கு பதிவு செய்யப்படுவதற்கே மாதங்கள் எடுத்துக் கொள்ளப்பட்டதும், விசாரணைக்கு வர இன்னும் பல ஆண்டுகள் காத்திருக்க வேண்டும் என கூறப்பட்டதும், நீதியை காலதாமதத்தின் மூலம் மறுக்கும் நிலையை பிரதிபலிக்கிறது.
வழக்கு விசாரணைக்கு வரும் நேரத்தில், குற்றச்சாட்டுக்குள்ளான அதிகாரிகள் பணி மாறுதல் பெறவோ, ஓய்வு பெறவோ வாய்ப்புள்ள நிலையில், பொறுப்புணர்வு எங்கே என்ற கேள்வி எழுகிறது. சட்டம் தெரிந்த, சட்டத்தைப் பயன்படுத்த தெரிந்த ஒரு வழக்கறிஞருக்கே இந்த நிலை என்றால், சட்ட அறிவோ, பொருளாதார வசதியோ இல்லாத சாமான்ய மக்களுக்கு நீதி எவ்வாறு கிடைக்கும் என்பது பெரிய கேள்வியாக நிற்கிறது.
இந்தச் சூழல், தகவல் அறியும் உரிமைச் சட்டம் நடைமுறையில் இருந்தாலும், அதை செயல்படுத்த வேண்டிய அரசு இயந்திரம் அதை மதிக்காதபோது, அந்தச் சட்டம் காகிதத்தில் மட்டுமே இருப்பதாகும் என்ற அச்சத்தை உருவாக்குகிறது. நீதிமன்றத்தை நாடுவதுதான் ஒரே வழி என்ற நிலை ஏற்பட்டால், அதைச் செய்ய இயலாத சாமான்ய மக்களுக்கு நீதி மறுக்கப்படும் அபாயம் அதிகரிக்கிறது. வழக்கறிஞர் மாதேஸ்வரன் அவர்களின் இந்த அனுபவம், தனிப்பட்ட பிரச்சினை அல்ல; இது பொதுமக்கள் அனைவரையும் பாதிக்கும் நிர்வாகப் பிரச்சினை என்றே பார்க்க வேண்டியதாக உள்ளது.

.jpg)