தருமபுரி | டிசம்பர் 27
தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், அதியமான்கோட்டை அறிஞர் அண்ணா அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) மூலம் நடைபெற்று வரும் தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் அரசு கல்வியியல் கல்லூரிகளுக்கான உதவிப்பேராசிரியர் தேர்வு மையத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் ரெ. சதீஸ் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் அரசு கல்வியியல் கல்லூரிகளுக்கான உதவிப்பேராசிரியர் தேர்வு – 2025 (APR 2025 – TRB Examination) இன்று (27.12.2025, சனிக்கிழமை) தருமபுரி மாவட்டத்தில் மொத்தம் 5 தேர்வு மையங்களில் முற்பகல் மற்றும் பிற்பகல் என இரு வேளைகளில் நடைபெற்று வருகிறது. இந்த தேர்வுக்கு விண்ணப்பித்த 44 மாற்றுத்திறனாளி தேர்வர்கள் உட்பட மொத்தம் 1,143 தேர்வர்களில், 1,027 தேர்வர்கள் தேர்வெழுதி வருகின்றனர். மீதமுள்ள 86 தேர்வர்கள் தேர்விற்கு வருகை தரவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.
தேர்வு பணிகள் ஒழுங்காகவும் வெளிப்படையாகவும் நடைபெறுவதை உறுதி செய்யும் வகையில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர்கள், முதன்மை கண்காணிப்பாளர்கள், துறை அலுவலர்கள், வழித்தட அலுவலர்கள், பறக்கும் படை உறுப்பினர்கள் மற்றும் அரை கண்காணிப்பாளர்கள் உள்ளிட்ட 250-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தேர்வு மையத்தில் பாதுகாப்பு, தேர்வர்களுக்கான வசதிகள், கண்காணிப்பு ஏற்பாடுகள் உள்ளிட்ட அம்சங்களை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்து, அலுவலர்களுக்கு தேவையான அறிவுறுத்தல்களை வழங்கினார்.

.jpg)