பொம்மிடி, டிச. 17:
தருமபுரி மாவட்டம் பொம்மிடி ரயில் நிலையத்தில் கூடுதல் ரயில் நிறுத்தம் வழங்க வேண்டும் எனக் கோரி, பொம்மிடி பொதுமக்கள் மற்றும் ரயில் பயணிகள் நல சங்கத்தின் சார்பில் தொடர்ந்து பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதன் ஒரு கட்டமாக, பாரதிய ஜனதா கட்சியின் விவசாய அணி மாநில தலைவர் திரு. நாகராஜ் அவர்கள் பொம்மிடி வருகை தந்தபோது, சங்க நிர்வாகிகள் அவரை நேரில் சந்தித்து கூடுதல் ரயில் நிறுத்தம் வழங்க வேண்டும் என கோரிக்கை மனு அளித்தனர். இந்த மனுவில், பொம்மிடி ரயில் நிலையத்தில் முக்கிய எக்ஸ்பிரஸ் ரயில்களுக்கு குறைந்தது இரண்டு நிமிட நிறுத்தம் வழங்கப்பட வேண்டும் என்றும், இதன் மூலம் பொம்மிடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பயணிகள் பயனடைவார்கள் என்றும் வலியுறுத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, திரு. நாகராஜ் பொம்மிடி ரயில் நிலையத்திற்கு நேரில் சென்று, அங்குள்ள கட்டமைப்புகள் மற்றும் பயணிகள் தேவைகள் குறித்து பார்வையிட்டார். சங்கத்தினர், ரயில் நிறுத்தம் இல்லாததால் பொதுமக்கள் சந்திக்கும் சிரமங்கள் குறித்து விரிவாக எடுத்துரைத்தனர். மேலும், இந்த கோரிக்கையின் அவசியம் மற்றும் நீண்டகால நிலுவை குறித்து அவருக்கு விளக்கமாக தெரிவிக்கப்பட்டது.
செய்தியாளர்களை சந்தித்த திரு. நாகராஜ், பொம்மிடி ரயில் நிலையத்தில் கூடுதல் ரயில் நிறுத்தம் வழங்குவது தொடர்பாக மத்திய ரயில்வே அமைச்சரை நேரில் சந்தித்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததாக தெரிவித்தார். இந்த உறுதியால், பொம்மிடி மற்றும் சுற்றுப்புற பகுதிகளைச் சேர்ந்த பயணிகள் மத்தியில் நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

.jpg)