பாலக்கோடு, நவ. 19 -
பாலக்கோடு தீர்த்தகிரி நகரில் வசிக்கும் முன்னாள் மீனவ கூட்டுறவு சங்க தலைவர் சக்திவேல் மற்றும் அவர் தலைமையிலான உறுப்பினர்கள் இணைந்து, பாலக்கோடு அருகே உள்ள தும்பலஅள்ளி அணையில் 2021–2026 வரை 5 ஆண்டுகளுக்கு குத்தகை எடுத்து மீன்வள தொழிலை செய்து வருகின்றனர்.
கடந்த 4 ஆண்டுகளாக அணைக்கு போதிய நீர் வரத்து இல்லாததால் நஷ்டம் அடைந்த நிலையில், இந்த ஆண்டுதான் நீர் வரத்து கிடைத்து மீன்களை வளர்த்து வரும் நேரத்தில் சிலர் அனுமதியின்றி மீன்பிடித்து வருவதாக புகார் எழுந்துள்ளது.
பூத்தம்பட்டியைச் சேர்ந்த தமிழரசு, சேட்டு, திருப்பதி, காசி உள்ளிட்ட நபர்கள் அணையில் அனுமதி இல்லாமல் மீன்பிடிப்பதுடன், மீன்பிடிப்பு வலைகளை அறுத்து சேதப்படுத்தி வருவதாக சக்திவேல் குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து கேட்டால் அடிதடி, கொலை மிரட்டல் உள்ளிட்ட அட்டகாசங்களிலும் ஈடுபடுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இன்று காலை அனுமதி இன்றி பிடிக்கப்பட்ட சுமார் 15 கிலோ மீன்களை பறிமுதல் செய்ததுடன், மீன் பிடித்த நபர்களை பிடித்து பாலக்கோடு காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார். இவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என சக்திவேல் போலீசில் புகார் அளித்ததால், சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662

.jpg)