பாலக்கோடு. நவ. 05 -
தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி மற்றும் பாலக்கோடு பகுதிகளில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகள் இன்று (04.11.2025) மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப. அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்திய தேர்தல் ஆணையத்தின் ஆணைப்படி, தர்மபுரி மாவட்டத்தில் உள்ள 057–பாலக்கோடு, 058–பென்னாகரம், 059–தர்மபுரி, 060–பாப்பிரெட்டிப்பட்டி மற்றும் 061–அரூர் (தனி) ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் 04.11.2025 முதல் 04.12.2025 வரை நடைபெறுகின்றன.
இந்த காலத்தில், ஒவ்வொரு வாக்காளருக்கும் வாக்குச்சாவடி நிலை அலுவலர் (BLO) மூலமாக கணக்கெடுப்பு படிவம் (இரட்டை பிரதியில்) வழங்கப்படுகிறது. BLO குறைந்தது மூன்று முறை வருகை செய்து, வாக்காளர் அல்லது குடும்ப உறுப்பினர் (18 வயதுக்கு மேற்பட்டவர்) வசம் படிவத்தை வழங்குவார். வாக்காளர், அதிலுள்ள விவரங்களை பூர்த்தி செய்து BLO-விடம் மீண்டும் வழங்க வேண்டும். ஆவணங்கள் இணைக்க தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெறப்பட்ட படிவங்களின் அடிப்படையில் திருத்தப்பட்ட விவரங்கள் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெறும். வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக ஏதேனும் சந்தேகங்கள் அல்லது புகார்கள் இருந்தால், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் அனைத்து வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகங்களில் உதவி மையங்கள் (Helpline Centres) அமைக்கப்பட்டுள்ளன.
பெறப்படும் புகார்கள் குறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப. அவர்கள் தெரிவித்துள்ளார்.
இக்கணக்கெடுப்பு ஆய்வின் போது பாலக்கோடு வட்டாட்சியர் திரு. அசோக்குமார், பென்னாகரம் வட்டாட்சியர் திரு. சண்முகசுந்தரம் ஆகியோர் உட்பட தொடர்புடைய அலுவலர்கள் மற்றும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
– செய்தி: தகடூர்குரல்.காம்

.jpg)