தருமபுரி மாவட்டத்தின் முக்கிய வர்த்தக மற்றும் போக்குவரத்து மையமான பாலக்கோடு நகரில், போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இதனால் வாகனங்கள் ஊர்ந்து செல்லும் நிலை உருவாகியுள்ளது. பாலக்கோடு நகரின் மையப்பகுதியில் பேருந்து நிலையம் அமைந்துள்ளது.
அரசு மற்றும் தனியார் சேர்த்து 200க்கும் மேற்பட்ட பேருந்துகள் தினந்தோறும்
ஓசூர், மாரண்டஹள்ளி, அஞ்செட்டி, பெங்களூர், சென்னை, தருமபுரி, சேலம், கோவை, பழனி உள்ளிட்ட பகுதிகளுக்கு இயக்கப்படுகின்றன. ஆனால் நகரில் இயங்கும் வணிகக் கடைகள் முன்பு சாலையை ஆக்கிரமித்து இருசக்கர வாகனங்கள், ஆட்டோக்கள் தாறுமாறாக நிறுத்தப்படுவதால், முக்கிய சாலைகளில் போக்குவரத்து மிகுந்த நெரிசல் ஏற்படுகிறது.
காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளி, கல்லூரி வாகனங்கள் இயக்கப்படும் நேரத்தில், இந்த நெரிசல் இன்னும் அதிகரித்து, சாதாரண வாகன ஓட்டிகளும் பாதசாரிகளும் பெரும் சிரமத்துக்குள்ளாகின்றனர். மேலும், சாலைகள் நெரிசலால் அவசர ஊர்திகள் (ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள்) கூட எளிதாகச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
“நகரத்தில் போக்குவரத்து ஒழுங்கை பேண அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பொதுமக்கள் நெரிசலில் தவித்து வருகிறார்கள்,” என்று மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இதனால், மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை துறையினர் துரிதமாக செயல்பட்டு, சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றி, போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த நிலையான தீர்வுகளை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு: 📞 9843 663 662

.jpg)