தருமபுரி, நவம்பர் 09:
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு சுங்கச்சாவடி அருகே குடியிருப்பு பகுதியை ஒட்டிய பகுதியில் உள்ள ஒரு உணவகத்தின் செயல்பாடு உள்ளூர் மக்களுக்கு பெரும் இடையூறாக மாறியுள்ளது. இதையடுத்து, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் பொதுமக்கள் புகார் மனு அளித்து, கடையை அப்புறப்படுத்தக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தகவலின்படி, பாலக்கோடு ஆறு வழிச் சாலையில் அமைந்துள்ள சுங்கச்சாவடி அருகே அந்த உணவகம் இயங்கி வருகிறது. சாலைப் பாதுகாப்பு விதிகளின்படி, சுங்கச்சாவடிக்கு அருகில் 500 மீட்டர் தூரம் வரை எந்தவொரு கடைகளும் இருபுறங்களிலும் இருக்கக் கூடாது என்பது நடைமுறையில் உள்ளது.
ஆனால், பாலக்கோடு சுங்கச்சாவடி அருகே உள்ள இந்த உணவகம், அந்த விதிமுறையை மீறி செயல்பட்டு வருவதாகவும், இரவு நேரங்களில் ஆம்னி பேருந்துகள் மற்றும் லாரி ஓட்டுநர்கள் அங்கு வண்டிகளை நிறுத்துவதால் சாலையில் நெரிசலும், அருகிலுள்ள குடியிருப்பு மக்களுக்கு இடையூறும் ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது.
மேலும், அந்த உணவகத்தில் இரவு நேரங்களில் உயர்ந்த ஒலியுடன் பாடல்கள் ஒலிபரப்பப்படுவது, அப்பகுதி மக்களுக்கு தூக்கமின்மை மற்றும் மனஅழுத்தம் ஏற்படுத்துவதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். அதிகாரிகளிடம் பல முறை மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால்,
“இது பொதுமக்களின் அமைதியான வாழ்க்கையை பாதிக்கிறது; உடனடியாக கடையை அகற்ற மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும்,”என பாதிக்கப்பட்ட குடியிருப்பு வாசிகள் வலியுறுத்தியுள்ளனர்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு: 📞 9843 663 662

.jpg)