தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியில் கஞ்சா போதையில் இருந்த நான்கு இளைஞர்கள் அராஜகத்தில் ஈடுபட்டு பொதுமக்கள் நடுங்கும் சூழல் நேற்று ஏற்பட்டது. பாலக்கோடு மைதீன் நகரை சேர்ந்த அமின் (21), கம்மாளர் தெருவை சேர்ந்த முகம்மது ஆவேஷ் (19), பாரிஸ் கார்னர் தெருவை சேர்ந்த ஆசிப் (22), அவுசிங் போர்டு பகுதியை சேர்ந்த ஸ்ரீநாத் (21) ஆகியோர் நான்கு பேரும் நேற்று மாலை அதிக அளவில் கஞ்சா பயன்படுத்தியுள்ளனர்.
இதனால் போதை தலைக்கேறி பல்வேறு வெறிச்செயல்களில் ஈடுபட்ட அவர்கள், பாலக்கோடு அருகே உள்ள கர்த்தாரஅள்ளி சுங்கச்சாவடியில் ஓசூரில் இருந்து திருநெல்வேலி நோக்கிச் சென்ற சரக்கு லாரியை கற்கள் எறிந்து கண்ணாடி உடைத்துள்ளனர். இதற்கு தடையாக நின்ற பர்கூர் சேர்ந்த லாரி டிரைவர் சக்திவேல் (27) மீது கத்தி மற்றும் இரும்பு ராட்டால் தாக்கி கத்திக்குத்து செய்து கடுமையாக காயப்படுத்தினர்.
பின்னர் இரவு பாலக்கோடு பேருந்து நிலையத்திற்குச் சென்ற அவர்கள், அங்கிருந்த பொதுமக்களை விரட்டி, கத்தி காட்டி மிரட்டியதோடு, தட்டி கேட்ட ஆட்டோ டிரைவரின் வயிற்றை கிழித்தும், மேலும் நான்கு பொதுமக்களை தாக்கியும் ரகளையில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த டி.எஸ்.பி. ராஜசுந்தர், இன்ஸ்பெக்டர் பாலசுந்தரம் தலைமையிலான குழு அராஜகத்தில் ஈடுபட்ட இளைஞர்களை மடக்கி பிடித்தது. இதில் ஆசிப் தப்பி ஓடியுள்ளான். மீதமுள்ள மூவரையும் பாலக்கோடு போலீசார் கைது செய்து தருமபுரி சிறையில் அடைத்தனர். தப்பியோடிய ஆசிப்பை தேடும் பணிகள் நடைபெற்று வருகிறது. பாலக்கோடு நகரம் மற்றும் கிராமப்புறங்களில் கஞ்சா தாராளமாக இளைஞர்களிடம் விற்பனை செய்யப்படுவதால் அப்பகுதியில் குற்றச்செயல்கள் அதிகரித்து வருவதாக பொதுமக்கள் கவலை தெரிவித்து வருகின்றனர்.
© தகடூர்குரல்.காம் | செய்தி & விளம்பர தொடர்புக்கு : 9843 663 662

.jpg)