Type Here to Get Search Results !

“இப்ப விழுமோ, எப்ப விழுமோ” நிலை: எரப்பைனஅள்ளி மேல்நிலை தண்ணீர் தொட்டியை சீரமைக்க கிராம மக்கள் கோரிக்கை.


பென்னாகரம், நவ. 27 -

தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியத்திற்கு உட்பட்ட எரப்பைனஅள்ளி கிராமத்தில் சுமார் 150-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். கிராமத்தில் செயல்படும் அரசு தொடக்கப் பள்ளியில் 30-க்கும் மேற்பட்ட மாணவ–மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.


இந்தப் பள்ளி வளாகத்திலேயே 60,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர் தேக்கத் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. கிராம மக்களுக்கும் மாணவர்களுக்கும் பயன்படக்கூடிய ஒரே மேல்நிலை தண்ணீர் தொட்டி இதுதான். கடந்த 40 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இந்த தொட்டி தற்போது மிக மோசமான நிலையைக் காட்டுகிறது.


நீண்ட நாட்களாக பராமரிப்பு செய்யப்படாததால், தொட்டியின் சிமெண்ட் கற்கள் இடிந்து விழும் நிலை ஏற்பட்டுள்ளது. பள்ளி வளாகத்தில் இருப்பதால், விளையாடும் குழந்தைகள் மீது எப்போது வேண்டுமானாலும் தொட்டி இடிந்து விழும் அபாயம் இருப்பதாக பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் கவலை தெரிவித்து வருகின்றனர்.


கிராமத்தில் சில இடங்களில் மினி-டாங்குகள் இருந்தும், அவையும் தற்போது பழுதடைந்து செயலிழந்த நிலையில் உள்ளன. இந்த மேல்நிலை நீர் டேங்க் சேதமடைந்தால், கிராம மக்கள் குடிநீருக்கு கடுமையான சிரமங்களை எதிர்நோக்க வேண்டியிருக்கும் என பொதுமக்கள் கூறுகின்றனர். எனவே, இந்த ஆபத்தான நிலையிலுள்ள மேல்நிலை நீர் தேக்கத் தொட்டியை சீரமைத்துத் தரவும், அவசியமெனில் புதியதாக மறுகட்டிடவும், மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் சேர்ந்து கோரிக்கை விடுத்துள்ளனர்.

© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies