இந்தியாவில் சுமார் 9 இலட்சம் பேர் டைப்–1 அல்லது இளம் பருவ நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் குழந்தைகள் மற்றும் இளம் வயதினரே. இவர்கள் தினமும் நான்கு முறை இன்சுலின் ஊசி எடுக்கும் நிலையிலும், குளுக்கோஸ் அளவைப் பரிசோதிக்க விரல் குத்துதல் போன்ற சிகிச்சைகள் மூலம் வாழ்நாள் முழுவதும் பராமரிக்கப்பட வேண்டியுள்ளது.
இத்தகைய குழந்தைகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் நோக்கில், தருமபுரி மருத்துவக் கல்லூரி குழந்தை நலத்துறை, தேசிய சுகாதார மிஷன் (NHM) மற்றும் கோயம்புத்தூரைச் சேர்ந்த “இதயங்கள்” அறக்கட்டளை இணைந்து கடந்த இரண்டு ஆண்டுகளில் 106 குழந்தைகளுக்கு இன்சுலின் பம்ப், குளுக்கோமீட்டர், குளுக்கோஸ் ஸ்ட்ரிப், 24 மணி நேர ஹெல்ப்லைன் சேவை உள்ளிட்ட இலவச சிகிச்சை வசதிகளை வழங்கி வருகின்றன.
புதியதாக திறக்கப்பட்ட டைப்–1 நீரிழிவு சிறப்பு பராமரிப்பு மையம், மேற்கத்திய நாடுகளுக்கு இணையான சிகிச்சை தரத்தை வழங்கக்கூடியது. இதில் விழித்திரை (Retina) கேமரா, சிறுநீரக செயல்பாடு மற்றும் ஹீமோகுளோபின் பரிசோதனைக்கான தன்னியக்க கருவிகள், தைராய்டு சோதனை, இன்சுலின் பேனா, குளுக்கோஸ் சென்சார், குளுக்கோமீட்டர்கள், மற்றும் நீரிழிவு கல்வியாளர்கள் உள்ளிட்ட வசதிகள் உள்ளன.
மாதந்தோறும் ஒரு குழந்தையின் சிகிச்சைக்கு சுமார் ₹5,000 மற்றும் வருடத்திற்கு மொத்தமாக ₹60 இலட்சம் வரை செலவாகிறது என மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த மையம் திறக்கப்பட்டதன் மூலம், தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஏழை குடும்பங்களின் குழந்தைகள் இலவசமாகவும், உலகத் தரத்தில் இணையான சிகிச்சையையும் பெற முடியும்.
“டைப்–1 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட எந்தக் குழந்தையும் சிகிச்சை இன்றி வாடக்கூடாது; அவர்கள் ஆரோக்கியமான, மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ வேண்டும் என்பதே எங்கள் குறிக்கோள்,” என இதயங்கள் அறக்கட்டளையின் நிறுவனர் மரு. கிருஷ்ணன் சுவாமிநாதன் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் அரசு தருமபுரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு. மனோகர், துணை முதல்வர் மரு. சாந்தி, இணை இயக்குநர் (மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள்) மரு. சாந்தி, துணை இயக்குநர் (சுகாதாரம்) மரு. இராஜேந்திரன், மருத்துவக் கல்லூரி கண்காணிப்பாளர் மரு. சிவக்குமார், குழந்தை நல மருத்துவர்கள் மரு. ரமேஷ் பாபு, மரு. பாலாஜி, இதயங்கள் அறக்கட்டளை இயக்குநர் திரு. ரமேஷ் விரராகவன், ராசி விதைகள் மேலாளர் திரு. பாலகிருஷ்ணன், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு: 📞 9843 663 662

.jpg)