தருமபுரி, நவம்பர் 11:
தேர்தல் ஆணையம் நாடு முழுவதும் காலகாலமாக வாக்காளர் பட்டியலை புதுப்பித்து, சரிபார்க்கும் பணிகளை மேற்கொள்கிறது. இதனை “Special Intensive Revision” என்று அழைக்கப்படுகிறது. இதன் நோக்கம் புதிய வாக்காளர்களை சேர்த்தல், முகவரி திருத்தம் மற்றும் மறைந்த வாக்காளர்களின் பெயரை நீக்குதல் ஆகும். ஆனால், சமீபத்தில் சில மாநிலங்களில் இந்த சீராய்வு அரசியல் நோக்கத்துடன் நடைபெறுகிறது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதன் பேரில் பல அரசியல் கட்சிகள் வெளிப்படைத்தன்மை குறித்த கேள்விகளை எழுப்பி வருகின்றன.
இந்நிலையில், தருமபுரியில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில், தேர்தல் ஆணையம் தனது நடவடிக்கைகளில் முழுமையான வெளிப்படைத்தன்மை கடைபிடிக்க வேண்டும் என்றும், ஜனநாயகத்தின் மீது மக்களின் நம்பிக்கை குறையாத வகையில் செயல்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
திமுகவின் தருமபுரி மேற்கு மாவட்ட செயலாளர் பி. பழனியப்பன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் தடங்கம் பி. சுப்பிரமணி, பி.என்.பி. இன்பசேகரன், மற்றும் திமுக பிரமுகர் பி. தர்மச்செல்வன் பல்வேறு கட்சித் பிரமுகர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மாநிலம் முழுவதும் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் நடந்து வருவதால், பொதுமக்களிடையே இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்துடன் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தில் கூட்டணி கட்சிகளின் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் நிலை பிரதிநிதிகள், சார்பு அணி அமைப்பாளர்கள், விவசாயிகள், வியாபாரிகள், வழக்கறிஞர்கள், ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் மற்றும் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு கண்டன முழக்கமிட்டனர். “வாக்காளர் பட்டியலில் வெளிப்படைத்தன்மை வேண்டும்”, “ஜனநாயகம் காக்கப்படும்” என்ற கோஷங்களுடன் நிகழ்ச்சி அமைதியாக நடைபெற்றது. காவல்துறையினர் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு: 📞 9843 663 662

.jpg)