தருமபுரி மாவட்டம் ஒடசல்பட்டி அருகே உள்ள மணியம்பாடி கிராமத்தில், பழுதடைந்த நிழற்கூடத்தை ஊரக வளர்ச்சி துறையினர் இடித்ததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
மணியம்பாடி பேருந்து நிறுத்தத்தில் பல ஆண்டுகளாக இருந்த பழுதடைந்த நிழற்கூடத்தை ஊரக வளர்ச்சி துறையினர் ஜேசிபி மூலம் இடித்து அகற்றி, புதிதாக புதிய நிழற்கூடம் அமைக்கும் பணிகளை தொடங்கினர்.
இதுகுறித்து தகவல் தெரியாத கிராம மக்கள்,
“எங்களிடம் எந்த தகவலும் கூறாமல் நிழற்கூடத்தை இடித்துவிட்டார்கள். இதற்கான காரணம் என்ன?” என்று கேள்வி எழுப்பி, சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.
தகவல் அறிந்து வந்த ஒடசல்பட்டி காவல்துறை மற்றும் ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள், மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் பிடிஓ செல்வம் அவர்கள்,
“அந்த நிழற்கூடம் ஏற்கனவே மிக மோசமான நிலையிலிருந்தது. வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாகவே பாதுகாப்பு காரணங்களால் இடித்து, புதிய நிழற்கூடம் அமைக்கப்படும். இதனால் யாருக்கும் பாதிப்பு ஏற்படாது,” என்று மக்களிடம் விளக்கினார்.
அதோடு, இந்த நடவடிக்கைக்கு முன்பாகவே கிராம சபை தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தது என்றும் தெரிவித்தார். பின்னர், அதிகாரிகளின் விளக்கத்தால் மக்கள் சமாதானம் அடைந்து, சாலை மறியல் கலைந்தது. சிறிது நேரம் பரபரப்பாக இருந்த அந்த பகுதி, பின்னர் வழக்கமான நிலைக்கு திரும்பியது.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு: 📞 9843 663 662

.jpg)