Type Here to Get Search Results !

தருமபுரியில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி மாவட்ட ஆட்சித்தலைவர் ரெ. சதீஸ் கொடியசைத்து துவக்கி வைத்தார்.


தருமபுரி, நவம்பர் 12:

மழைநீரை சேமிப்பதன் முக்கியத்துவத்தை மக்களிடம் எடுத்துரைக்கும் நோக்கில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் தருமபுரி நகர பேருந்து நிலையத்தில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி இன்று நடைபெற்றது. இப்பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்து, மழைநீர் சேகரிப்பு குறித்த துண்டுப் பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கினார்.


தொடர்ந்து, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறையின் அதிநவீன மின்னணு விளம்பர வாகனம் மூலம் மழைநீர் சேகரிப்பின் அவசியம் குறித்து குறும்படங்கள் ஒளிபரப்பப்பட்டன. இதனை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார்.


மழைநீரைச் சேகரிப்பது நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்துவதோடு மட்டுமல்லாமல், குடிநீர் தேவைக்கும், விவசாயத்திற்கும், கோடை காலத்தில் நீர் பற்றாக்குறை சமாளிக்கவும் இன்றியமையாதது என ஆட்சியர் விளக்கமளித்தார்.


தமிழ்நாடு அரசு நீர் மேலாண்மை மற்றும் நிலத்தடி நீர் மட்ட உயர்வை நோக்கமாகக் கொண்டு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பை ஒவ்வொரு கட்டிடத்திலும், குடியிருப்புப் பகுதிகளிலும் அமைப்பது அவசியம் என்றும், பருவமழைக்கு முன் மக்கள் தங்கள் வீட்டு கூரைகள் மற்றும் சேமிப்பு தொட்டிகளை சுத்தம் செய்ய வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.


அவர் மேலும் கூறியதாவது:

“மழைநீர் கட்டமைப்புகளை முறையாக பராமரிப்பதன் மூலம் ஒரு சொட்டு நீரும் வீணாகாமல் நிலத்தடி நீருக்கு சேர்க்கப்பட வேண்டும். இதனால் நீரின் தரம் மேம்படும், தாழ்வான பகுதிகளில் நீர் தேங்கும் பிரச்சனை குறையும்.”


வீட்டு மழைநீர் சேகரிப்பு அமைப்புகளில் மணல் வடிப்பான், கூழாங்கற்கள், ஜல்லிகற்கள் போன்றவை சுத்தம் செய்யப்பட வேண்டும். தேவைப்படின் புதிய மணல் மாற்ற வேண்டும். 1000 லிட்டர் அளவுள்ள சேமிப்புத் தொட்டிக்கு 4 கிராம் ப்ளீச்சிங் பவுடர் கரைசலை கலக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது. மொட்டை மாடிகளில் விழும் மழைநீரை குழாய்கள் மூலம் வடிகட்டி கிணறுகளுக்குள் செலுத்தலாம்; இது நீர் ஊடுருவலை மேம்படுத்தும் என்றும், உபயோகத்தில் இல்லாத குழாய்க் கிணறுகளையும் மழைநீர் சேகரிப்பிற்கு பயன்படுத்தலாம் என்றும் கூறப்பட்டது.


மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி தருமபுரி பேருந்து நிலையத்திலிருந்து நான்கு ரோடு வழியாக வள்ளலார் திடல் வரை நடைபெற்றது. இப்பேரணியில் ஓம் சக்தி நர்சிங் கல்லூரி மாணவர்கள் 250க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில் தருமபுரி நகர மன்றத் தலைவர் திருமதி லட்சுமி நாட்டான் மாது, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேற்பார்வை பொறியாளர்கள் திரு. செந்தில் குமார், திரு. நித்யானந்தம், நிர்வாக பொறியாளர்கள் திருமதி திவ்யா, திருமதி நிரஞ்சினி, துணை நிலநீர் வல்லுநர் திருமதி ராதிகா, நகர் நல அலுவலர் திரு. இலட்சியவர்ணா, உதவி நிர்வாக பொறியாளர்கள் திருமதி பாக்கியா, திரு. முருகன், திருமதி மீனா, திரு. தானேஷ், திரு. நவீன் உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு: 📞 9843 663 662 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies