தருமபுரி – நவம்பர் 24
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக அதியன் கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் இன்று (24.11.2025) மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் பொதுமக்களிடமிருந்து 530 கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.
கட்டுமான தொழிலாளர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி சான்றிதழ்கள் வழங்கல்
தருமபுரி அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், ஸ்ரீ சக்தி தனியார் தொழிற்பயிற்சி நிலையம், அரூர் மற்றும் காரிமங்கலம் அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்கள் மூலம் பயிற்சி பெற்ற கட்டுமான தொழிலாளர்களுக்கு, மாவட்ட ஆட்சியர் ரெ. சதீஸ் அவர்கள் இன்று திறன் மேம்பாட்டு பயிற்சி சான்றிதழ்களை வழங்கினார். தருமபுரி மாவட்டத்தில் மொத்தம் 4200 கட்டுமான தொழிலாளர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வாக்காளர் பட்டியல் SIR–2026 பணியில் சிறந்த பணியாற்றிய BLO-களுக்கு பாராட்டு
தருமபுரி மாவட்டத்தில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் – 2026 சிறப்பாக நடைபெற்று வருவதை முன்னிட்டு, சிறப்பாக பணியாற்றிய BLO-க்களுக்கு ஆட்சியர் ரெ. சதீஸ் அவர்கள் பொன்னாடை அணிவித்து பரிசுகளை வழங்கினார்.
புதிய பத்திரிக்கையாளர் அறை திறப்பு
புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள தருமபுரி பத்திரிக்கையாளர் அறை, மாவட்ட ஆட்சியர் ரெ. சதீஸ் மற்றும் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. மணி முன்னிலையில் இன்று குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைக்கப்பட்டது.
மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை – ஆட்சியர் உறுதி
கூட்டத்தில் பொதுமக்கள் சாலை வசதி, குடிநீர், பேருந்து, பட்டா, சிட்டா பெயர் மாற்றம், குடும்ப அட்டை, வாரிசுச் சான்று, முதியோர் ஓய்வூதியம், மாற்றுத்திறனாளி உதவித்தொகை உள்ளிட்ட பல தேவைகளுக்கான மனுக்களை அளித்தனர். மனுக்கள் அனைத்தும் தொடர்புடைய துறைகளுக்கு அனுப்பி விரைந்து தீர்வு அளிக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.
“முதலமைச்சர் பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு உடனடி தீர்வு வழங்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்” என அவர் தெரிவித்தார்.
நிகழ்வில் பங்கேற்றவர்கள்
பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் ஆ. கோவிந்தசாமி, தருமபுரி நகர மன்ற தலைவர் லட்சுமி நாட்டான் மாது, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் லோகநாதன், பத்திரிகையாளர்கள், அரசுத் துறை அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662

.jpg)