பாலக்கோடு, நவ. 18:
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அரசு மருத்துவமனையில், பணம் பெற்றுக்கொண்டு கர்ப்பிணி பெண்களின் கருச்சிசுவின் பாலினத்தை சட்டவிரோதமாக தெரிவித்து வந்ததாக பெரும் அதிர்ச்சிகரமான முறைகேடு வெளிவந்துள்ளது.
மருத்துவமனையின் தலைமை மருத்துவர் டாக்டர் பாலசுப்ரமணியத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து நடத்தப்பட்ட மறைமுக கண்காணிப்பில் தற்காலிக செவிலியர் பரிமளா மீது சந்தேகம் எழுந்தது.
பின்னர் கடந்த ஒரு மாத CCTV காட்சிகளை ஆய்வு செய்ததில், சம்பந்தமில்லாத சில ஆண் நபர்கள் கர்ப்பிணி பெண்களுடன் ஸ்கேன் அறைக்குள் செல்வதும், செவிலியர் பரிமளா இந்நபர்களிடம் பணம் பெறுவதும் தெளிவாக பதிவாகி இருந்தது.
இதை கண்டு அதிர்ச்சி அடைந்த தலைமை மருத்துவர், உடனடியாக பாலக்கோடு காவல் நிலையத்தில் புகார் செய்தார். தகவல் அறிந்த செவிலியர் பரிமளா உடனே தப்பி ஓடி தலைமறைவானார்.
வழக்கு பதிவு செய்த பாலக்கோடு போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டதில், ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்த கிளாராமேனகா தேவி (25) பிரதீப் (26) அனுமந்தபுரம் கிராமத்தை சேர்ந்த வடிவேல் (41) உள்ளிட்டோர் இதில் இடைத்தரகர்களாக செயல்பட்டது தெரியவந்தது.
ஆந்திரா மாநிலம் சித்தூர் பகுதியில் பதுங்கி இருந்த கிளாராமேனகா தேவி, பிரதீப் ஆகியோரைக் கைது செய்து தருமபுரி சிறையில் அடைத்தனர். மேலும், தப்பியோடிய செவிலியர் பரிமளா உட்பட மூவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
சர்வசாதாரணமாக மக்கள் நம்பிக்கை வைத்து செல்லும் அரசு மருத்துவமனையில், சிசுவின் பாலினத்தை பணத்திற்காக சட்டவிரோதமாக தெரிவிக்கும் செவிலியரின் செயல்பாடு பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படியான குற்றச்செயல் PCPNDT சட்டத்திற்கு நேரடி மீறல் ஆகும்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662

