தருமபுரி நவம்பர் 18:
தருமபுரி மாவட்டம் அதியமான் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், வேளாண்மைத் துறையின் சார்பில் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ–மாணவியர்களுக்கான உயிர்ம வேளாண்மை தொடர்பான கல்வி சுற்றுலா பேருந்து சேவையை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் இன்று (18.11.2025) கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இதன் போது ஆட்சியர் அவர்கள் தெரிவித்ததாவது:
தமிழ்நாடு வேளாண்மைத் துறையின் நிதிநிலை அறிக்கையின்படி, மாணவர்களிடையே உயிர்ம வேளாண்மை விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக உயிர்ம வேளாண்மை மேற்கொள்ளும் விவசாயிகளின் பண்ணைகளுக்கு நேரடி கல்விச் சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக, தருமபுரி வட்டாரத்தில் உள்ள அதியமான் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் இருந்து 50 மாணவர்கள், அவ்வையார் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இருந்து 50 மாணவியர்கள் என மொத்தம் 100 மாணவர்கள், மேட்டூரில் அமைந்துள்ள பைரவி ஆர்கானிக் பண்ணைக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர்.
ஆட்சியர் அவர்கள் மேலும் கூறியதாவது:
உயிர்ம வேளாண்மை என்பது ரசாயன உரங்களும் பூச்சிக்கொல்லிகளும் பயன்படுத்தாமல் இயற்கை முறைகளான பயிர் சுழற்சி, பசுந்தாள் உரம், மண்புழு உரம், கால்நடை உரம் போன்றவற்றை பயன்படுத்தி செய்யப்படும் விவசாயம்.
இது
-
மண் வளத்தை அதிகரிக்கும்,
-
சுற்றுச்சூழலை பாதுகாக்கும்,
-
நச்சில்லாத உணவுப் பொருட்களை விளைவிக்கும்,
-
நீண்டகால விவசாயத்திற்கு நிலைத்தன்மை வழங்கும்,என பல நன்மைகள் கொண்டது.
மாணவர்களுக்கு ரசாயன உரங்களின் பாதிப்புகள் மற்றும் இயற்கை வேளாண்மையின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இந்த கல்விச் சுற்றுலாவின் முக்கிய நோக்கம் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த சுற்றுலாவினால் மாணவர்கள் தங்களது பகுதிகளில் உயிர்ம வேளாண்மையை ஊக்குவித்து, விவசாயத்தை இலாபகரமான நிலையான துறையாக மாற்ற உதவுவார்கள் என ஆட்சியர் நம்பிக்கை தெரிவித்தார்.
இம்முயற்சியில் வேளாண் இணை இயக்குநர் (பொ) திருமதி ரத்தினம், தருமபுரி வட்டாட்சியர் திரு. சௌகத் அலி மற்றும் பள்ளி மாணவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662

.jpg)