தருமபுரி, நவம்பர் 4:
தருமபுரி மாவட்டத்தில் ரூ.39.14 கோடி மதிப்பீட்டில் உருவாகி வரும் புதிய அதிநவீன பஸ் நிலைய கட்டுமானப் பணிகளை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தருமபுரி நகரில் பென்னாகரம் மெயின் ரோட்டில், சேலம் - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை அருகில் தனியார் பங்களிப்புடன் கட்டப்படும் இந்த புதிய பஸ் நிலையம் 10 ஏக்கர் பரப்பளவில் உருவாகி வருகிறது.
ஒரே நேரத்தில் 55 பஸ்கள் நுழைந்து இயக்கப்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்நிலையம், மாநிலத்தில் மிகச் சிறந்த வசதிகளைக் கொண்ட பஸ் நிலையங்களில் ஒன்றாக உருவாகவுள்ளது. பஸ் நிலைய வளாகத்தில் குடிநீர், சுகாதார வசதிகள், நடைபாதைகள், பயணிகள் அமர்விடங்கள், மழைநீர் வடிகால் அமைப்புகள் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மேலும், தரைத் தளம் மற்றும் முதல் தளத்தில் கடைகள், உணவகங்கள், ஏ.டி.எம். மையம், பொருட்கள் வைப்பதற்கான பாதுகாப்பு அறை, நேரக் காப்பாளர் அறை, தாய்மார்கள் பாலூட்டும் அறை, டிரைவர்கள் மற்றும் பயணிகள் ஓய்வு அறைகள், டைல்ஸ் பதிக்கும் பணிகள் உள்ளிட்ட பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.
தற்போது பணிகள் 80 சதவீதம் நிறைவு பெற்றுள்ளன, மீதிப் பணிகள் இறுதி கட்டமாக நடைபெற்று வருகின்றன. முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆய்வின்போது பஸ் நிறுத்தம், நடைபாதை, காத்திருப்பு பகுதி மற்றும் சுற்றியுள்ள அடிப்படை வசதிகள் ஆகியவற்றை நேரில் பார்வையிட்டார். நகராட்சி நிர்வாக இயக்குநர் மதுசூதன் ரெட்டி, மற்றும் மாவட்ட ஆட்சியர் ரெ. சதீஷ், இ.ஆ.ப., ஆகியோர் பணிகளின் நிலை குறித்து முதல்வருக்கு விரிவாக விளக்கமளித்தனர். பொதுமக்கள் மற்றும் பயணிகளின் வசதிக்காக பணிகளை விரைந்து நிறைவு செய்யுமாறு முதல்வர் சம்பந்தப்பட்ட துறையினருக்கு உத்தரவிட்டார்.
இந்நிகழ்வில் அமைச்சர்கள் எ.வ. வேலு, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், எஸ்.எஸ். சிவசங்கர், இரா. ராஜேந்திரன், முன்னாள் அமைச்சர் பி. பழனியப்பன், நகராட்சி தலைவர் லட்சுமி நாட்டான் மாது, நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநர் அசோக் குமார், நகராட்சி ஆணையாளர் சேகர், ஸ்ரீ விஜய் வித்யாலயா குழுமத் தலைவர் டி.என்.சி. இளங்கோவன், மற்றும் பல்வேறு துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

.jpg)