தருமபுரி, அக். 03 -
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மக்களின் இல்லங்களுக்கே சென்று அரசுத் துறைகளின் சேவைகளை வழங்கும் “உங்களுடன் ஸ்டாலின்” என்ற புதிய திட்டத்தை அறிவித்து தொடங்கி வைத்துள்ள நிலையில், தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியம் வெங்கடசமுத்திரம், விநாயகா திருமண மண்டபம், பையர்நத்தம், கடத்தூர் ஒன்றியம், ஸ்ரீ மீனாட்சி மஹால் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம்களை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் இன்று (03.10.2025) நேரில் பார்வையிட்டார்.
இத்திட்ட முகாம்களில் நலத்திட்ட உதவிகள் வேண்டி விண்ணப்பித்த பயனாளிகளின் மனுக்களின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு, சுமார் 50-க்கும் மேற்பட்டோருக்கு பட்டா மாறுதல் ஆணைகள், பிறப்பு சான்றிதழ்கள், வேலை அடையாள அட்டைகள், மின் இணைப்பு பெயர் மாற்ற ஆணைகள், முதலமைச்சர் விரிவான மருத்துவ காப்பீடு திட்ட அட்டைகள் உள்ளிட்ட அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் நடைபெற்ற மருத்துவ முகாம்களையும் பார்வையிட்டார். மேலும், “உங்களுடன் ஸ்டாலின்” திட்டத்தின் கீழ், தருமபுரி மாவட்டத்தில் மொத்தம் 176 முகாம்கள் நடைபெறும் என்றும், பெறப்படும் மனுக்களில் உடனடி தீர்வு வழங்கக்கூடியவை உடனடியாகத் தீர்க்கப்படும்; மற்றவை அதிகபட்சம் 45 நாட்களில் தீர்வு காணப்படும் என்றும் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சிகளில் ஆதிதிராவிடர் நலக்குழு உறுப்பினர் திரு. சரவணன், தமிழ்நாடு நுகர்வோர் பொருள் வாணிப கழக மேலாளர் திரு. தணிகாசலம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பல்வேறு துறை அதிகாரிகள், முன்னாள் மற்றும் தற்போதைய உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.