பாலக்கோடு, அக். 03-
தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் “மக்களை காப்போம் – தமிழகத்தை மீட்போம்” என்ற கோஷத்துடன் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எழுச்சி பிரச்சாரம் நடத்தினார்.
பாலக்கோடு பேருந்து நிலையம் முன்பு ஆயிரக்கணக்கான மக்களைச் சந்தித்து பேசிய அவர், கரூரில் நடந்த நிகழ்வில் 41 பேர் உயிரிழந்ததை வரலாற்றிலேயே நடந்த மிகக் கொடூர சம்பவம் என குறிப்பிட்டார். திமுக அரசின் ஆட்சி குறைபாடுகள், காவல்துறை செயல்பாடுகள், போதைப்பொருள் பிரச்சினைகள் மற்றும் பெண்கள் மீதான பாதுகாப்பின்மை குறித்து அவர் கடுமையாக விமர்சித்தார்.
அதிமுக ஆட்சியில் மக்கள் நலனுக்காக செயல்பட்ட பல திட்டங்கள், மாணவர்களுக்கு வழங்கப்பட்ட மடிக்கணினி, விவசாயிகளுக்காக தொடங்கப்பட்ட ஆசியாவின் மிகப்பெரிய கால்நடை பூங்கா, ஊட்டி மாடுக் கன்று திட்டம், ரம்ஜான் கஞ்சி மற்றும் ஹஜ் பயணம் உதவித்திட்டங்கள் அனைத்தையும் திமுக அரசு நிறுத்திவிட்டதாக குற்றஞ்சாட்டினார்.
“மீண்டும் அதிமுக ஆட்சியில் வந்தால் நிறுத்தப்பட்ட அனைத்து நலத்திட்டங்களும் மீண்டும் அமல்படுத்தப்படும். விவசாயிகளின் நீர் பாசன திட்டங்களும் நிறைவேற்றப்படும்,” என எடப்பாடி பழனிசாமி உறுதியளித்தார்.
இந்த எழுச்சி பிரச்சாரத்தை முன்னாள் அமைச்சர் கே.பி. அன்பழகன் எம்.எல்.ஏ. தலைமையில் அதிமுக நிர்வாகிகள் ஏற்பாடு செய்திருந்தனர்.