Type Here to Get Search Results !

தருமபுரி மாவட்ட 60 ஆண்டுகளின் பெருமை... தருமபுரி வைர விழா பூங்காவை திறந்தார் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்!.


தருமபுரி, அக்டோபர் 14 -

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள தருமபுரி வைர விழா பூங்காவை மாண்புமிகு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் திரு. எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்களின் முன்னிலையில் இன்று (14.10.2025) திறந்து வைத்து பார்வையிட்டார்.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் திரு. எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அவர்கள் தெரிவித்ததாவது:

“இந்தியா விடுதலை பெற்றதிலிருந்து முதன்முறையாக, ஒருங்கிணைந்த சேலம் மாவட்டத்திலிருந்து தருமபுரி மாவட்டம் 1965 அக்டோபர் 2ஆம் தேதி பிரிந்து தமிழ்நாட்டின் 17ஆவது மாவட்டமாக உருவானது. சங்ககாலத்தில் நட்பிற்கு புகழ்பெற்ற அதியமான் ஆட்சி நடத்திய குறுநிலம் இன்று தருமபுரியாக வளர்ந்து விளங்குகிறது.

கடந்த 60 ஆண்டுகளில், தருமபுரி மாவட்டம் வேளாண்மை, கலை, அறிவியல், கல்வி, தொழில், சிறுதானிய உற்பத்தி ஆகிய துறைகளில் குறிப்பிடத்தகுந்த வளர்ச்சி கண்டுள்ளது. மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் பொருளாதார முன்னேற்றம் அடைந்திருப்பது ஒரு பெருமை.

ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் தருமபுரி மக்களின் நீண்டகால குடிநீர் தேவையை பூர்த்தி செய்கிறது. தற்போது அதன் மூன்றாம் கட்டம் நடைமுறைக்கு வருகிறது. ஒகேனக்கல் அருவி “தென்னிந்தியாவின் நயாகரா” என அழைக்கப்படுவது தருமபுரியின் பெருமை.

சிறுதானிய உற்பத்தியில் தமிழ்நாட்டில் முன்னோடி மாவட்டமாக தருமபுரி திகழ்கிறது. மேலும், தமிழ்நாட்டில் அதிகளவில் மாம்பழ உற்பத்தி செய்யும் மாவட்டம் எனும் பெருமையும் இதற்கு உண்டு.

விவசாயிகள் மற்றும் தொழில் முனைவோர்களுக்காக சிப்காட் தொழில் பூங்கா (1,733 ஏக்கர்) அமைக்கப்பட்டுள்ளது. 60 ஆண்டுகளில் பல அணைகள், கல்வி நிறுவனங்கள், மருத்துவ மற்றும் சட்டக் கல்லூரிகள் ஆகியவை நிறுவப்பட்டுள்ளன. இவை அனைத்தும் தருமபுரியின் வளர்ச்சியின் சான்றுகளாகும்.”

அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் திரு. ஆ. மணி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ்.எஸ். மகேஸ்வரன், நகர மன்ற தலைவர் திருமதி. லட்சுமி நாட்டான் மாது, மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி. கவிதா, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் பல அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies