தருமபுரி, அக். 14 -
தருமபுரி மாவட்டம் இலக்கியம்பட்டி பகுதியில், மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வங்கிகளில் இருந்து கடன் பெற்று கொடுத்து, அதன் பணத்தை வங்கியில் செலுத்தாமல் ரூ.50 லட்சம் வரை மோசடி செய்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதையடுத்து, நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் (எஸ்பி அலுவலகம்) நேரில் சென்று புகார் அளித்தனர்.
தகவலின்படி, என்.ஆர்.எம்.எஸ். எனும் தொண்டு நிறுவனத்தில் பணியாற்றி வந்த வனிதா, சென்னம்மாள், விஜயலட்சுமி, போதுமணி உள்ளிட்ட சிலர், 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் சென்று, பெண்களை அணுகி, “மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் உதவி பெற்று தருவோம்” என நம்பவைத்து பணம் வசூலித்துள்ளனர். கம்பைநல்லூர், நத்தமேடு, லலிகம், நல்லபள்ளி, மிட்டாரெட்டி அள்ளி, பாகல்பட்டி, முக்கல்நாயக்கன்பட்டி, அச்சல்வாடி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மகளிர் சுய உதவி குழுக்களில், ஒருவருக்கு ரூ.1 லட்சம் கடன் வழங்கியபோது, ரூ.84,000 மட்டுமே கொடுத்து, மீதியை கமிஷன் என பெயரில் பிடித்துக் கொண்டதாக கூறப்படுகிறது.
பெண்கள் மாதந்தோறும் கடன் தொகையை தவறாமல் கட்டியிருந்தும், அந்த பணம் வங்கிக்கு செலுத்தப்படாமல் இருப்பது பின்னர் தெரியவந்தது. இதன் காரணமாக, சில மகளிர் குழுக்களின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. பெண்கள் வங்கிகளை நேரடியாக அணுகியபோது, “கடன் தொகை முழுவதும் செலுத்தப்படாவிட்டால், கணக்குகள் திறக்க முடியாது” என வங்கியினர் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால், ஏமாற்றப்பட்ட பெண்கள் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இதையடுத்து, நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள், தருமபுரி எஸ்.பி. அலுவலகத்தில் நேரில் சென்று, மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படும் தொண்டு நிறுவனம் மற்றும் அதன் ஊழியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். புகாரை பாதிக்கப்பட்ட பெண்களின் சார்பில் தருமபுரியைச் சேர்ந்த மணிஷா தலைமையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அளித்தனர்.