தருமபுரி, அக். 18, 2025
தருமபுரி மாவட்டம் ஒகேனக்கலில் தமிழக நிருபர்கள் சங்கத்தின் நான்காம் ஆண்டு துவக்க விழா மற்றும் கருத்தரங்கம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சங்கத்தின் நிறுவனர் தலைவர் கு. இராசசேகரன் தலைமையேற்று விழாவை துவக்கினார். மாநில பொதுச் செயலாளர் ஜி. சிவக்குமார் வரவேற்புரை நிகழ்த்தினார்.
பென்னாகரம் காவல் துறை துணைக் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் குத்துவிளக்கேற்றி விழாவை துவக்கி வைத்தார். பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே. மணி பங்கேற்று சிறப்புரை ஆற்றினார். 40 ஆண்டுகளுக்கும் மேலாக பத்திரிகைத் துறையில் சிறப்பாக பணியாற்றி வரும் மூத்த பத்திரிகையாளர்கள் — முரசொலி மணி, கலைஞர் டிவி வேணுகோபால், ஜெயா டிவி சீனிவாசன், திருமலைவாசன் ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர். அதேபோல் மாவட்ட அளவில் சிறந்து விளங்கிய செய்தியாளர்கள் புகழேந்தி, சரவணக்குமார், வெற்றிவேல், டி.யூ.ஜே. சுரேஷ், சுகுமார், விவேகானந்தன் உள்ளிட்டோருக்கும் நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன.
பத்திரிகையாளர்களுக்கான கருத்தரங்கத்தை இயக்குநர் சங்கர் துவக்கி வைத்தார். இதில் தீக்கதிர் மூத்த பத்திரிகையாளர் கண்ணன் மற்றும் சன் நியூஸ் முதுநிலை உதவியாசிரியர் சக்தி சூர்யா ஆகியோர் உரையாற்றினர். விழாவில் பத்திரிகையாளர்களுக்கான நல வாரியம் அமைத்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் ஆகியோருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும், பென்னாகரம் வட்டாரத்தில் தமிழக அரசின் நல்லாசிரியர் விருது பெற்ற 5 ஆசிரியர்கள் மற்றும் சிறந்த 6 அரசு பள்ளிகள் கௌரவிக்கப்பட்டன. 30 பத்திரிகையாளர்களுக்கு வாழ்க்கை காப்பீட்டு பாலிசிகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் பென்னாகரம் வட்டார வளர்ச்சி அலுவலர் சக்திவேல், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் லோகநாதன், உதவி பொறியாளர் தமிழரசன், திமுக ஒன்றிய செயலாளர்கள் எரியூர்.என்.செல்வராஜ், மடம்.முருகேசன், பேரூராட்சி தலைவர் வீரமணி, செயல் அலுவலர் செந்தில்குமார், காவல் ஆய்வாளர் முரளி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இறுதியில் மண்டல செயலாளர் எஸ். சரவணன் நன்றியுரை நிகழ்த்தினார். நிகழ்ச்சிகளை நல்லாசிரியர் கோவிந்தசாமி திறம்பட தொகுத்து வழங்கினார்.