தருமபுரி, அக். 17, 2025
கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள அரியநாச்சி கிராமம் சிவக்குமார் நிலத்தில் மக்காச்சோளக் கதிர் சாகுபடியில் பணியாற்றிய கழுதூர் கிராமத்தைச் சேர்ந்த கனிகா, பாரிஜாதம், சின்ன பொண்ணு என்கிற ராஜேஸ்வரி மற்றும் சிவக்குமார் மனைவி ராஜேஸ்வரி ஆகியோர் மீது மின்னல் விழுந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இவர்களுடன் பணி செய்த தவமணி என்பவர் இரண்டு கண்களும் கடுமையாக பாதிக்கப்பட்டு தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் குறித்து தருமபுரி மாவட்ட இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி (CPI) சார்பில் மாவட்ட செயலாளர் ஜெ. பிரதாபன் தெரிவித்துள்ளார்:
“இயற்கை பேரிடலால் உயிரிழந்த விவசாய தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு அரசு அறிவித்துள்ள ரூ.5 லட்சம் நிவாரணம் போதுமானதல்ல.
மக்காச்சோளக் கதிர் சாகுபடியில் வேலை செய்தபோது மின்னல் தாக்கி உயிரிழந்த இந்த விவசாய தொழிலாளர்கள் அனைவரும் ஏழை, உழைப்பாளி குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.
ஆகையால், முதல்வர் நிவாரண நிதியில் இருந்து ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்கப்பட வேண்டும் எனவும்,
தற்போதைய ₹5 லட்சம் நிவாரணத் தொகை பாரபட்சமானது என்பதையும், அதை உடனடியாக திருத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.”