பாலக்கோடு, அக். 22 -
தருமபுரியில் நடைபெற்ற பள்ளிகளுக்கிடையேயான மாவட்ட அளவிலான மகளிர் கைப்பந்து போட்டியில் திருமல்வாடி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகள் சிறப்பான சாதனை புரிந்து முதலிடம் பிடித்துள்ளனர்.
பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் தருமபுரி தனியார் பள்ளியில் நடைபெற்ற இப்போட்டியில், தருமபுரி, பாலக்கோடு, பென்னாகரம், அரூர், பாப்பிரெட்டிப்பட்டி உள்ளிட்ட 15 பள்ளிகளைச் சேர்ந்த 17 வயதிற்குட்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் கடுமையான போட்டியில் வெற்றி பெற்று, திருமல்வாடி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகள் கேடயமும் சான்றிதழ்களும் பெற்று மாவட்ட அளவில் முதலிடம் பெற்றனர்.
இந்த வெற்றியின் மூலம் அவர்கள் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர். இந்நிகழ்வில், வெற்றி பெற்ற மாணவிகளை உடற்கல்வி ஆசிரியர்கள் பாரதி மற்றும் குமார் ஆகியோர் வழிநடத்தினர்.
மாணவிகளின் சாதனைக்கு பள்ளி தலைமை ஆசிரியர் ரேவதி, உதவி தலைமை ஆசிரியர்கள் இளவரசன் மற்றும் சென்னகேசவன், ஆசிரியர்கள் மற்றும் மாணவிகள் அனைவரும் பாராட்டு தெரிவித்து வாழ்த்தினர்.