பாலக்கோடு, அக். 22 -
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள பேளாரஅள்ளி அரசு மேல்நிலைப் பள்ளியில் 2000–2001ஆம் ஆண்டு 10ம் வகுப்பு படித்த முன்னாள் மாணவர்கள் 25 ஆண்டுகள் கழித்து மீண்டும் ஒன்று கூடினர். இந்நிகழ்ச்சி பள்ளி தலைமை ஆசிரியர் பாபுசுந்தரம் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. முன்னாள் ஒன்றிய குழு தலைவர் வி.எம். நாகராஜன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வேலாவள்ளி சேகர், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் மாரியப்பன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
முன்னாள் மாணவ, மாணவிகள் ஒருவரையொருவர் சந்தித்து, பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். 25 ஆண்டுகளுக்கு முன் வகுப்பறையில் கழித்த இனிய நினைவுகளை நினைவு கூர்ந்த அவர்கள், தங்களுக்கு பாடம் கற்பித்த ஆசிரியர்களுக்கும் தற்போது பணியாற்றும் ஆசிரியர்களுக்கும் பொன்னாடை அணிவித்து நினைவுப் பரிசுகள் வழங்கினர்.
இந்நிகழ்வில் முன்னாள் மாணவர்கள், ஆசிரியர்கள், ஊர் கவுண்டர்கள், மந்திரி கவுண்டர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்குத் திரளாக வந்த அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது.