தருமபுரி, அக். 09 -
தருமபுரி மாவட்டம் வள்ளாளர் திடலில், மாற்றுக் கட்சியிலிருந்து விலகி தமிழக வாழ்வுரிமைக் கட்சியில் இணையும் விழாவும், அதனைத் தொடர்ந்து பொது கூட்டமும் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கட்சியின் நிறுவனர் தலைவர் வேல் முருகன் தலைமையேற்றார்.
முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த வேல் முருகன் அவர்கள், பல்வேறு அரசியல் மற்றும் சமூக பிரச்சினைகள் குறித்து கருத்து தெரிவித்தார். சோழந்தாபுரம் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டியில் மலம் கலந்த சம்பவம் குறித்து கடும் கண்டனம் தெரிவித்த அவர், “இது சமூக அநீதி மற்றும் நிர்வாக அலட்சியத்தின் வெளிப்பாடு” என்றார்.
அத்துடன், டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் மக்களின் பணம் மோசடி செய்யப்படுவது குறித்து மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். அதேபோல், நடிகர் விஜய்க்கு வழங்கப்பட்ட பாஜக துணை ராணுவ பாதுகாப்பு குறித்து அவர், “தமிழ்நாட்டில் மக்களிடம் விஜயை பார்க்கும் ஈர்ப்பு இருக்கிறது, ஆனால் அதனை அரசியல் நலனுக்காக பயன்படுத்துவது தவறு” என்றார்.
விஜயைச் சுற்றியுள்ள அரசியல் நடவடிக்கைகளை அவர் கடுமையாக விமர்சித்தார். “விஜய்க்கு வரும் கூட்டம் ஓட்டாக மாறுமா என்பதை தேர்தலில் தான் பார்க்க முடியும்,” என்றும், “அவரது கட்சி பாஜகவுடன் கூட்டணி வைப்பாரா அல்லது கொள்கை வழியில் செல்வாரா என்பது மக்களிடம் தெளிவாகும்,” என்றும் தெரிவித்தார். மேலும், சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தி சமூக நீதி அரசு என்ற பெயருக்கு ஏற்ப நடந்து கொள்ள வேண்டும் என மாநில அரசுக்கு வலியுறுத்தினார்.
போரூர் சிறுமி பாலியல் வன்முறை சம்பவம் குறித்து பேசும் போது, “அந்த கொடூரர்களுக்கு வழக்கறிஞர்களும் நீதிபதிகளும் முன்வரக்கூடாது” எனக் கூறினார். செய்தியாளர்கள் மீதான தாக்குதல்களையும் அவர் கண்டித்து, “மக்களோடு மக்களாக இருந்து பணியாற்றும் அரசியல் கலாசாரம் மட்டுமே நீடிக்க வேண்டும்” என தெரிவித்தார். அதேபோல், “சினிமா வெளிச்சத்தை வைத்து அரசியலில் அமர விரும்புவது மக்கள் நம்பிக்கைக்கு துரோகம்,” என்றும், “மக்கள் பிரச்சினைகளுக்காக போராடும் கட்சிகளுடன் கைகோர்க்க நாம் தயார்,” என்றும் கூறினார்.