பென்னாகரம், தருமபுரி, அக்டோபர் 3:
தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தில் நடைபெறும் வாரச்சந்தையில் அனுமதியின்றி மர்ம நபர்களால் அமைக்கப்பட்ட தகரக் கொட்டகை காரணமாக வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் சிரமம் அனுபவித்து வருவதாக புகார் எழுந்துள்ளது. செவ்வாய்க்கிழமைகளில் நடைபெறும் பென்னாகரம் வாரச்சந்தைக்கு சேலம், கிருஷ்ணகிரி, அஞ்செட்டி, ராயக்கோட்டை, பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வியாபாரிகள் வந்து காய்கறி, பழம், மிளகாய், அத்தியாவசிய பொருட்கள், கால்நடைகள் உள்ளிட்டவற்றை விற்பனை செய்து வருகின்றனர்.
பழமை வாய்ந்த இந்த வாரச்சந்தையை புதுப்பிக்கும் வகையில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.2.32 கோடி மதிப்பீட்டில் 3x2 அளவிலான 224க்கும் மேற்பட்ட சிறிய கடைகள், பேவர் பிளாக் நடைபாதை, மேற்கூரை உள்ளிட்ட வசதிகள் புதிதாக அமைக்கப்பட்டு, சில மாதங்களுக்கு முன்பு முதலமைச்சர் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். ஆனால் புதுப்பிக்கப்பட்ட இந்த சந்தையில் சில மர்ம நபர்கள் இரவோடு இரவாக தகர சீட் அமைத்து ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். மேலும், குப்பை தொட்டிகள் இல்லாததால் காய்கறி கழிவுகள் பல இடங்களில் தேங்கி துர்நாற்றம் வீசி வருகிறது.
அதேபோல், வாரச்சந்தையில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கட்டப்பட்ட சுகாதாரக் கழிப்பிடங்கள் பராமரிப்பு இல்லாமல் கதவுகள், தண்ணீர் பைகள், டைல்ஸ் உடைந்துள்ளதால் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. இதனால், இரவு நேரங்களில் பொதுமக்கள் வெளிப்புறத்தில் இயற்கை உபாதைகளை கழிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், கழிவுநீர் அருகிலுள்ள குடியிருப்பு பகுதிகளுக்குள் செல்லும் சாக்கடை வழியாக பாய்ந்து நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
புதிய மேற்கூரை சந்தையின் சில பகுதிகளில் மட்டுமே தெருமின்விளக்குகள் உள்ளதால், பல இடங்களில் இருள் சூழ்ந்துள்ளது. இதனை பயன்படுத்திக் கொண்டு சிலர் தார்ப்பாய்கள் அமைத்து இரவு நேரங்களில் மது அருந்தும் இடமாக மாற்றி வருவதாகவும் கூறப்படுகிறது.
இதனால், வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் –
-
அனுமதியின்றி அமைக்கப்பட்ட தகரக் கொட்டகையை அகற்ற வேண்டும்,
-
கழிவறையை சீரமைத்து பயன்படுத்தக்கூடிய வகையில் மாற்ற வேண்டும்,
-
சந்தை முழுவதும் குப்பை அகற்றப்பட்டு சுத்தமாக பராமரிக்கப்பட வேண்டும்,என அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.