கரூரில் 42 பேர் உயிரிழந்த படுகொலை சம்பவத்தை அடுத்து, “தவெக தலைவன் விஜயை கொலை வழக்கில் கைது செய்!”, “உயிரிழந்த குடும்பங்களுக்கு தலா ₹2 கோடியும், காயம் அடைந்தவர்களுக்கு ₹1 கோடியும், விஜய் சொத்தை பறிமுதல் செய்து நட்ட ஈடு வழங்கு!” என்ற கோரிக்கையுடன், புரட்சிகர மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் தமிழகம் முழுவதும் தெருமுனை கூட்டங்கள், சுவரொட்டி இயக்கங்கள், ஆர்ப்பாட்டங்கள் உள்ளிட்ட பிரச்சாரங்கள் நடைபெற்றன.
அதன் ஒரு பகுதியாக, தருமபுரி மாவட்டம் பென்னாகரம் நகரத்தில் சுவரொட்டி ஒட்டும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இரவு நேரத்தில் ஒட்டப்பட்ட சுவரொட்டிகளை, தவெக நிர்வாகிகள் நால்வர் கிழித்துள்ளனர். இதைத் தொடர்ந்து, இரவு 10 மணியளவில் புரட்சிகர மக்கள் அதிகாரம் சார்பில் 10 தோழர்கள் பென்னாகரம் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தனர்.
இன்று (08.10.2025) காலை, காவல்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்டவர்களை அழைத்து விசாரித்தனர். அதையடுத்து சுமார் 40க்கும் மேற்பட்ட தோழர்கள் காவல் நிலையம் சென்றனர். காவல் துணைக் கண்காணிப்பாளர் தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையில், தவெக நகர செயலாளர் ரஞ்சித் குமார், பாலமுரளி ஆகியோர் தாங்கள்தான் சுவரொட்டிகளை கிழித்ததாகவும், இனி இத்தகைய செயல்களில் ஈடுபடமாட்டோம் என்றும் மன்னிப்பு கேட்டனர். இதன் அடிப்படையில் பிரச்சினை சமரசமாக தீர்க்கப்பட்டது.
தமிழகத்தின் வரலாறு, பண்பாடு, தியாகம், போராட்டக் குணம் ஆகியவற்றை சீரழிக்கப் புதிய பிராண்டாக ‘விஜய்’ உருவாக்கப்பட்டுள்ளார். கவர்ச்சி அரசியலின் பின்னணியில் பாசிச சக்திகளின் நிழல் தெளிவாக தெரிகிறது.
தமிழக இளைஞர்கள் சினிமா மயக்கம், பணம், மதுபானம், பிரியாணி ஆகியவற்றின் அரசியலிலிருந்து விடுபட்டு, உண்மையான உழைக்கும் மக்களின் ஜனநாயக புரட்சிக்கான அரசியலில் இணைந்து செயல்பட வேண்டும்” எனக் கூறப்பட்டுள்ளது.