Type Here to Get Search Results !

தலைநிமிரும் தருமபுரி அகவை 60 – வைரவிழா மற்றும் நிறைவுவிழா அதியமான் கோட்டையில் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெற்றது.


தருமபுரி, அக். 08 -

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், அதியமான் கோட்டை ஊராட்சி, வள்ளல் அதியமான் கோட்டத்தில் “தலைநிமிரும் தருமபுரி அகவை 60 – வைரவிழா மற்றும் நிறைவுவிழா” நிகழ்ச்சி இன்று (08.10.2025) மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.

தருமபுரி மாவட்டம் 1965 ஆம் ஆண்டு அக்டோபர் 2ஆம் தேதி சேலம் மாவட்டத்திலிருந்து பிரிந்து தமிழ்நாட்டின் 17வது மாவட்டமாக உருவானது. இதன் 60ஆம் ஆண்டு வைரவிழாவை ஒட்டி, பல்வேறு நிகழ்ச்சிகள், பேச்சுப்போட்டி, கட்டுரை போட்டி போன்றவை நடத்தப்பட்டன. வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார். 


மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் உரையாற்றும்போது, “தருமபுரி மாவட்டம் கடந்த 60 ஆண்டுகளில் வேளாண்மை, கலை, அறிவியல், தொழில், சிறுதானிய உற்பத்தி உள்ளிட்ட பல துறைகளில் மிகுந்த முன்னேற்றம் கண்டுள்ளது. மகளிர் சுயஉதவிக்குழு இயக்கம், அரசு மருத்துவக் கல்லூரி, சட்டக்கல்லூரி, பொறியியல் மற்றும் கலை அறிவியல் கல்லூரிகள் என கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் தருமபுரி மாவட்டம் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை அடைந்துள்ளது” என தெரிவித்தார்.


மேலும், “நான் முதல்வன், புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன் போன்ற பல கல்வித் திட்டங்களை மாணவ, மாணவியர்கள் சிறப்பாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்” என்றும் அவர் கேட்டுக்கொண்டார். விழாவை முன்னிட்டு, அறிஞர் அண்ணா அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இருந்து வள்ளல் அதியமான் கோட்டம் வரை 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் பங்கேற்ற பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் துவக்கி வைத்தார். பேரணிக்குப் பின் நடைபெற்ற கலைநிகழ்ச்சிகளையும் அவர் பார்வையிட்டார்.


இந்நிகழ்ச்சியில் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் திரு. ஆ. மணி, மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி. கவிதா, தருமபுரி வருவாய் கோட்டாட்சியர் திருமதி. காயத்ரி, இணை இயக்குநர் (மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள்) மரு. சாந்தி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருமதி. ஐ. ஜோதி சந்திரா, மாவட்ட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு அலுவலர் திருமதி. தே. சாந்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies