தருமபுரி, அக்டோபர் 25:-
இக்கூட்டத்தில் பங்கேற்ற கட்சியின் நிறுவனர் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் மருத்துவர் ராமதாஸ் அவர்கள் உரையாற்றியபோது, தருமபுரி மாவட்டம் பாமக வளர்ச்சிக்கான “விதை மண்” என பெருமையுடன் குறிப்பிட்டார். அவர் கூறியதாவது:
“கிட்டத்தட்ட 46 ஆண்டுகளுக்கு முன்பு, எங்கள் ஊருக்கு ஒரு முனிவர் வந்தார். அவர் ஒரு பையில் விதை கொடுத்து, ‘மேற்கே போய் தருமபுரியில் விதை. பிற மாவட்டங்களுக்கு தருமபுரி மண்ணை எடுத்துச் செல்’ என்று சொன்னார். நான் அந்த விதையை தூவினேன். இன்று அந்த விதை நன்றாக வளர்ந்து இருக்கிறது. தருமபுரி மாவட்டத்தில் முளைத்த அந்த விதை இன்று தமிழ்நாட்டெங்கும் வேரூன்றி வளர்ந்து வருகிறது,” எனக் கூறி பெருமையடைந்தார்.
தொடர்ந்து அவர், கட்சிக்கான புதிய அறிவிப்பை வெளியிட்டார்:
“இன்றிலிருந்து பாமக செயல் தலைவராக ஶ்ரீ காந்தி பரசுராமன் பொறுப்பேற்பார். அவர் கட்சிக்கும் எனக்கும் பாதுகாப்பாக இருப்பார். அதேபோல் தமிழ்க்குமரன் பாட்டாளி இளைஞர் சங்க தலைவராக நியமிக்கப்படுகிறார். இவர் தருமபுரி மாவட்டத்திற்கே அல்லாமல், தமிழ்நாட்டுக்கே பெருமை சேர்ப்பார்,” எனக் கூறினார்.
ஜி.கே. மணியின் மகனான தமிழ்க்குமரனை “ஓய்வறியா உழைப்பாளியின் பிள்ளை” எனப் புகழ்ந்த ராமதாஸ், “தமிழ்நாட்டுக்கே சேவை செய்வார்” என நம்பிக்கை தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து, அன்புமணியைக் குறித்தும் அவர் நகைச்சுவையாகக் கூறினார்:
“அன்புமணியிடம் ‘உனக்கும் கட்சிக்கும் என்ன சம்பந்தம்?’ என கேட்டால், அவர் ‘இந்த தருமபுரி மண்ணை எடுத்துத் தூவி வருகிறேன்’ என்பார். ஜி.கே. மணி ஓய்வின்றி உழைத்தவர், சட்டமன்றத்தில் தனது தொகுதி மக்களைப் பற்றி அதிகம் பேசியவர்,” எனப் பாராட்டினார்.
மேலும் ராமதாஸ், “சாதி வாரியாக கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற எங்கள் கோரிக்கை கண்டிப்பாக நிறைவேறும். அது தேர்தலுக்கு முன்போ, பிறகோ நடக்கும் — முன்பே நடந்தால் மகிழ்ச்சி,” எனத் தெரிவித்தார். இதற்கான போராட்ட தேதியை பின்னர் அறிவிப்பதாகவும் கூறினார். 2026-ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, “நான் வெற்றிக்கூட்டணி அமைப்பேன். பாமக எந்த பக்கம் சென்றாலும் அந்த கூட்டணி வெற்றி பெறும்,” என தன்னம்பிக்கையுடன் தெரிவித்தார்.
தனது உரையின் நிறைவில் ராமதாஸ், “புதிய செயல் தலைவர் காந்தி பரசுராமனும், என் மகளும் கட்சிக்காகவும், பாட்டாளி மக்களுக்காகவும் நாளும் உழைப்பார்கள்,” எனக் கூறி கூட்டத்தை நிறைவு செய்தார்.

.jpg)