இண்டூர், அக். 25 -
இண்டூர் அருகே உள்ள தளவாய் அள்ளி நேரு நகர் பகுதியில் சர்ச்சைக்குரிய தனிநபர் நிலத்தில் புதைக்கப்பட்ட பிணம், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவையடுத்து ஆறு வாரங்களுக்கு பின்பு தோண்டி எடுக்கப்பட்டு தருமபுரி சுடுகாட்டில் மீண்டும் புதைக்கப்பட்டது.
இண்டூர் அருகே உள்ள நேரு நகர் பகுதியில் வசித்து வரும் பெருமாள் மனைவி காவேரியம்மாள் என்பவருக்கு சொந்தமான நிலத்தில், பேடர் அள்ளி கிராமத்தைச் சேர்ந்த ராஜமாணிக்கம் என்ற நபர் கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி மரணமடைந்ததை அடுத்து, அவரது பிணம் உறவினர்கள் மற்றும் ஊர் பொதுமக்களால் வருவாய் துறை மற்றும் காவல்துறை அனுமதியின்றி அந்நிலத்திலேயே புதைக்கப்பட்டது.
இதனை எதிர்த்து, காவேரியம்மாள் “தனது சொந்த நிலத்தில் சட்டவிரோதமாக பிணம் புதைக்கப்பட்டுள்ளது; அதை அகற்றி பொது சுடுகாட்டில் மாற்ற வேண்டும்” என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், “பிணத்தை தோண்டி எடுத்து, சட்டப்படி பொது சுடுகாட்டில் மீண்டும் புதைக்க வேண்டும்” என உத்தரவிட்டது.
இந்த உத்தரவை நடைமுறைப்படுத்துவதற்காக, நல்லம்பள்ளி தாசில்தார் பிரசன்னமூர்த்தி தலைமையில் வருவாய் துறை அதிகாரிகள், பென்னாகரம் காவல் துணைக் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் மற்றும் நான்கு இன்ஸ்பெக்டர்கள் உட்பட 50க்கும் மேற்பட்ட போலீசாருடன் சம்பவ இடத்துக்கு சென்றனர்.
தளவாய் அள்ளி கிராம மக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால், கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளின் கீழ் அதிகாரிகள் பிணத்தை தோண்டி எடுத்து, அமரர் ஊர்தி மூலம் சுமார் 17 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு எதிரிலுள்ள பொது சுடுகாட்டில் மீண்டும் புதைத்தனர். இறந்தவரின் மகன்கள் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்த அனுமதிக்கப்பட்டது.
சர்ச்சைக்குரிய நிலத்தில் புதைக்கப்பட்ட பிணத்தை தோண்டி எடுத்து, 17 கிலோமீட்டர் தூரம் எடுத்துச் சென்று மீண்டும் புதைத்த சம்பவம், இண்டூர் மற்றும் தருமபுரி பகுதிகளில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

.jpg)
.jpg)