Type Here to Get Search Results !

பாலக்கோடு அருகே பெண் கொலை வழக்கு: அதிர்ச்சி தகவல்; கள்ள உறவு கசப்பாகி பெண் கொலை - மாமன், மச்சான் இருவர் கைது.


பாலக்கோடு, அக்டோபர் 23:

தருமபுரி மாவட்டத்தில் கள்ள உறவு பிரச்சினையால் பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தருமபுரி மாவட்டம் கம்பைநல்லூர் பகுதியைச் சேர்ந்த கணபதி என்பவருக்கும், காரிமங்கலம் மந்தை வீதியைச் சேர்ந்த வள்ளி (40) என்பவருக்கும் 25 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு கீர்த்திகா (20) மற்றும் ஹரிகரன் (16) என்ற இரு பிள்ளைகள் உள்ளனர்.

ஆனால், கடந்த 18 ஆண்டுகளாக வள்ளி கணவனிடமிருந்து பிரிந்து தனியாக வாழ்ந்து வந்தார். இதற்கிடையில் அவர் பல ஆண் நண்பர்களுடன் தொடர்பில் இருந்ததாகவும், குடிபழக்கத்திலும் ஈடுபட்டிருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், திருச்சி மாவட்டம் துறையூரைச் சேர்ந்த லாரி டிரைவர் புஷ்பராஜ் (45) என்பவருடன் வள்ளிக்கு கள்ள உறவு ஏற்பட்டது. இதை புஷ்பராஜின் மனைவி அறிந்ததால், அவர் சமீப காலமாக வள்ளியைத் தவிர்த்துவந்தார்.


இதனால் மன உளைச்சலுக்குள்ளான வள்ளி, புஷ்பராஜை தொடர்பு கொண்டு “உன்னை உடனே பார்க்க வேண்டும்” என கூறி ஓசூருக்கு வரும்படி கேட்டிருந்தார். புஷ்பராஜ் அப்போது குஜராத்தில் இருந்து சரக்கு ஏற்றிக்கொண்டு வரும் வழியில் இருந்ததால், ஓசூரில் வள்ளியைச் சந்தித்தார். அவர் உடன் தனது மச்சான் மணிவேல் (42) என்பவரும் வந்திருந்தார். மூவரும் ராயக்கோட்டையில் ஒன்றாக அமர்ந்து மது அருந்தியதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. பின்னர் பாலக்கோடு அருகே கொம்மநாயக்கனஅள்ளி சாலையில் லாரியை நிறுத்தி பேசியபோது, வள்ளி “நானும் உன்னுடன் வருவேன், என்னுடன் குடும்பமாக வாழ வேண்டும்” என்று வற்புறுத்தியுள்ளார்.


இதனால் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த புஷ்பராஜ், மணிவேலிடம் “அவளை சுத்தியால் அடிக்கச் சொல்லி,” மணிவேல் வள்ளியின் தலையில் சுத்தியால் பலமாக அடித்துள்ளார். பின்னர் வள்ளியை லாரியிலிருந்து கீழே தள்ளி, கத்தியால் கழுத்தை அறுத்ததாக போலீசார் தெரிவித்தனர். இதில் வள்ளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.


சம்பவம் குறித்து பாலக்கோடு போலீசார் வழக்கு பதிவு செய்து, புஷ்பராஜ் மற்றும் மணிவேலை கைது செய்து சிறையில் அடைத்தனர். கள்ளக் காதல் பிரச்சினையில் மாமனும், மச்சானும் சேர்ந்து பெண்ணை கொலை செய்த சம்பவம், தருமபுரி மாவட்டம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies