தருமபுரி, அக். 25 -
தருமபுரி மாவட்டம், தருமபுரி வட்டம், அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் “நலம் காக்கும் ஸ்டாலின்” என்ற முழு உடல் பரிசோதனை மருத்துவ முகாம் இன்று (25.10.2025) நடைபெற்றது.
இம்முகாமை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு, நான்கு மாற்றுத் திறனாளிகளுக்கு மருத்துவ அடையாள அட்டைகளையும், 25 பழங்குடியின மக்களுக்கு பழங்குடியினர் நலவாரிய அடையாள அட்டைகளையும், 40 கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களையும் வழங்கினார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க, உயர் மருத்துவ சேவைகளை பொதுமக்களுக்கு வழங்கும் நோக்கில் “நலம் காக்கும் ஸ்டாலின்” திட்டம் 02.08.2025 அன்று தொடங்கப்பட்டது. தருமபுரி மாவட்டத்தில் ஆகஸ்ட் முதல் டிசம்பர் வரை 30 உயர் மருத்துவ சேவை முகாம்கள் நடைபெறவுள்ளன.
இன்றைய முகாமில் 17 வகையான சிறப்பு மருத்துவ சேவைகள் வழங்கப்பட்டன — பொதுமருத்துவம், அறுவை சிகிச்சை, குழந்தை நலம், இதயநலம், நரம்பியல், நுரையீரல், தோல், பல், கண், காது-மூக்கு-தொண்டை, மனநலம், இயற்கை மருத்துவம் உள்ளிட்டவை.
கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்கள், முதியோர், மாற்றுத் திறனாளிகள், இதய நோயாளிகள் உள்ளிட்டோர் இம்முகாமில் இலவசமாக பரிசோதனை மற்றும் மருந்து சேவைகளை பெற்றனர். பரிசோதனைக்கு வரும் அனைவருக்கும் ஆபா கார்ட் (ABHA CARD) உருவாக்கம் செய்யப்பட்டு, முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் (CMCHIS) பதிவு செய்யும் பணியும் மேற்கொள்ளப்பட்டது.
மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் முகாமை பார்வையிடும் போதுஇ மருத்துவ சேவைகள், ஆலோசனைகள் மற்றும் பரிசோதனைகள் குறித்து ஆய்வு செய்தார். பொதுமக்கள் அனைவரும் இம்முகாம்களின் மூலம் முழுமையான மருத்துவ நலன்களை பெறுமாறு கேட்டுக்கொண்டார்.
இந்நிகழ்வில் தருமபுரி நகர மன்ற தலைவர் திருமதி லட்சுமி நாட்டான் மாது, அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் மனோகர், துணை இயக்குநர் சுகாதாரம் டாக்டர் இராஜேந்திரன், மாவட்ட பழங்குடியினர் நல அலுவலர் ஆ.க. அசோக்குமார், நகர் நல அலுவலர் இலட்சியவர்ணா, மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.

.jpg)