பாப்பிரெட்டிப்பட்டி, செப்.30 –
பாப்பிரெட்டிப்பட்டி அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறும் நாட்டு நலப்பணித்திட்ட முகாம் ஐந்தாம் நாளான இன்று பள்ளி வளாகத்தில் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் பல்வேறு சமூகப்பணிகள் நடைபெற்றன. இந்நிலையில், பாப்பிரெட்டிப்பட்டி முருகன் கோயில் பாதையில் உள்ள உதர் செடிகள் மற்றும் நெகிழிகள் அகற்றம் செய்யப்பட்டது. இத்தொடரில் சமூகத்தினருக்கும் மாணவர்களுக்கும் பிளாஸ்டிக், கழிவு பொருட்கள் மற்றும் சுற்றுப்புற சுத்தம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
மேலும், இந்தியன் வங்கியின் மேலாளர் திரு. ஜெயவாணன் மற்றும் சேலம் மாவட்ட ஓடை காட்டுப்புதூர் பழங்குடியினர் நலப்பள்ளி தலைமை ஆசிரியர் திரு. சுகுமாரன் பள்ளியின் வளாகத்தில் மரக்கன்றுகளை நடுதல் நிகழ்ச்சியை முன்னிலையில் நடத்தி, மாணவர்களுக்கு நாட்டு நலப்பணித்திட்டத்தின் முக்கியத்துவம் மற்றும் சமூக சேவைகளின் பயன்கள் குறித்து விளக்கி கருத்துக்கள் வழங்கினர்.
நிகழ்வில், பள்ளி தலைமை ஆசிரியர் திரு. கலைவாணன் தலைமையில், பட்டதாரி ஆசிரியர் திரு. தங்கதுரை, கணினி ஆசிரியர் திரு. பார்த்தீபன், உடற்கல்வி ஆசிரியர் திரு. ஜெகஜீவன்ராம் உட்பட பல ஆசிரியர்கள் கலந்து கொண்டு மாணவர்களுக்கு வழிகாட்டும் பணியில் ஈடுபட்டனர். இறுதியில், திட்ட முகாம் அலுவலர் பிரகாசம் நன்றியுரை கூறி, மாணவர்களின் ஈடுபாடு மற்றும் சமூகப்பணித் திட்டத்தின் செயல்பாடுகளை பாராட்டினார்.