தருமபுரி, செப்.30 –
பாலக்கோடு நகரில் ஜி.எஸ்.டி. பதிவு சான்றிதழ் வழங்குவதற்காக ரூ.5,000 லஞ்சம் வாங்கிய துணை வணிகவரி அலுவலர் செல்வகுமார் இன்று லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டார். காரிமங்கலம் அருகே சின்னமாட்லாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 29 வயது மணிகண்டன், தனது சேவை மையத்திற்கான ஆட்டோமேஷன் கன்சல்டன்ட் தொழில் செய்ய ஜி.எஸ்.டி. பதிவு சான்றிதழ் பெற இணைய வழியில் விண்ணப்பித்தார். விண்ணப்பம் அங்கீகரிக்கப்பட்ட பின்னர் சான்றிதழ் வழங்கப்பட்டிருந்த நிலையில், திடீரென ஜி.எஸ்.டி. எண் முடக்கப்பட்டது.
கடந்த 25ம் தேதி, பாலக்கோட் வணிகவரி அலுவலகத்திற்கு சென்று விசாரணை செய்த மணிகண்டனுக்கு, துணை வணிகவரி அலுவலர் செல்வகுமார் நேரில் வந்து ஜி.எஸ்.டி. எண்ணை மீண்டும் செயல்படுத்த ஆயிரம் ரூபாய் லஞ்சம் தரவேண்டும் என்று கோரிக்கை வைத்தார். மணிகண்டன் லஞ்சம் கொடுக்க மறுத்து தருமபுரி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு அலுவலகத்தில் புகார் செய்தார்.
அலுவலகத்தின் அறிவுரைப்படி, இன்று மாலை மணிகண்டன் ரசாயன தடவிய ரூ.5,000 ரூபாய் நோட்டுகளை செல்வகுமாருக்கு கொடுத்த போது, லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி. நாகராஜன் மற்றும் இன்ஸ்பெக்டர் பெருமாள் உட்பட போலீசார் நேரில் வந்து, அலுவலரை கையும் களவுமாக பிடித்து விசாரித்தனர். விசாரணையில் லஞ்சம் வாங்கியது உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, செல்வகுமாரை தருமபுரி சிறையில் அடைத்தனர்.
இதுவரை கடந்த 2 மாதங்களில் பாலக்கோட்டில் மட்டும் வி.ஏ.ஒ, போலீஸ், இன்ஸ்பெக்டர், கருவூல அதிகாரி உள்ளிட்ட 4 பேர் லஞ்சம் வாங்கியதாக கைதானது குறிப்பிடத்தக்கது. துணை வணிகவரி அலுவலரின் கைது சம்பவம் அரசு அலுவலர்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.