பாலக்கோடு, அக். 13 -
தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் தக்காளி சந்தை முழு வீச்சில் செயல்பட்டு வருகிறது. பாலக்கோடு, மாரண்டஅள்ளி, காரிமங்கலம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து விவசாயிகள் தாங்கள் சாகுபடி செய்த தக்காளிகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். இதேசமயம், தேனி, திண்டுக்கல், ஈரோடு போன்ற வெளி மாவட்டங்களிலிருந்தும் வியாபாரிகள் பாலக்கோடு மார்க்கெட்டுக்கு வந்து விவசாயிகளிடமிருந்து தக்காளிகளை கொள்முதல் செய்து வருகின்றனர்.
பாலக்கோடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ச்சியான மழையால் தக்காளி விளைச்சல் குறைந்துள்ளது. இதன் விளைவாக மார்க்கெட்டில் தக்காளி வரத்து குறைந்து, விலை திடீரென உயர்ந்துள்ளது. கடந்த ஆறு மாதங்களாக ஒரு கிலோ தக்காளி ரூ.10 முதல் ரூ.12 வரை மட்டுமே விற்பனையாகி வந்த நிலையில், தற்போது திடீரென விலை ரூ.16 முதல் ரூ.18 வரை உயர்ந்துள்ளது.
15 கிலோ கொண்ட ஒரு கூடை தக்காளி ரூ.250 முதல் ரூ.270 வரை விற்பனையாகிறது. வெளி மாவட்டங்களிலுள்ள சில்லறை சந்தைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.20 முதல் ரூ.25 வரை விற்பனையாகி வருகிறது. தக்காளி வரத்து மேலும் குறைந்தால் விலை இன்னும் அதிகரிக்கும் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். திடீர் விலையேற்றத்தால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.