தருமபுரி, அக். 10 -
தருமபுரியைச் சேர்ந்த ஆதி பவுண்டேஷன் அமைப்புக்கு தமிழ்நாடு மாநில குருதி பரிமாற்று குழுமம் சார்பில் மாநில அளவிலான மாண்புமிகு விருது வழங்கப்பட்டுள்ளது. தேசிய தன்னார்வ ரத்ததான தினத்தை முன்னிட்டு, அதிகபட்ச ரத்ததான முகாம்கள் மற்றும் தினசரி ரத்ததானிகள் ஏற்பாடு செய்தமைக்காக ஆதி பவுண்டேஷன் மாநில அளவில் சிறந்த தன்னார்வ அமைப்பாக தேர்வு செய்யப்பட்டது.
சென்னையில் நடைபெற்ற சிறப்பு விழாவில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் அவர்கள் கைகளால் ஆதி பவுண்டேஷன் அமைப்பிற்கு மாநில விருது வழங்கப்பட்டது. இந்நிகழ்வில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மை செயலாளர் முனைவர் பா. செந்தில் குமார் (ஐ.ஏ.எஸ்.), தமிழ்நாடு மாநில குருதி பரிமாற்று குழும இயக்குநர் ஆர். சீதாலட்சுமி (ஐ.ஏ.எஸ்.), மற்றும் பல அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்த விருதிற்கான பரிந்துரையை செய்த தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவர் கன்யா அவர்களுக்கு ஆதி பவுண்டேஷன் இதயம் கனிந்த நன்றியை தெரிவித்துள்ளது. மேலும், எப்போதும் உற்சாகமாக ரத்ததானத்தில் பங்கேற்று சமூக நலனில் அர்ப்பணிப்புடன் செயல்பட்ட ஆதி பவுண்டேஷன் உறுப்பினர்கள் மற்றும் அனைத்து ரத்தக் கொடையாளர்களுக்கும் இந்த விருது அர்ப்பணிக்கப்படுகிறது.