தருமபுரி, அக். 11 -
தருமபுரி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை சார்பாக தீபாவளி பண்டிகை முன்னிட்டு இனிப்பு, காரம் தயாரிப்பாளர்கள், பேக்கரி உரிமையாளர்கள், விற்பனையாளர்கள் மற்றும் பண்டிகை கால தற்காலிக இனிப்பு, காரம் தயாரிப்பு செய்து விற்பனை செய்யும் விற்பனையாளர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் மற்றும் உணவு பாதுகாப்பு மேற்பார்வையாளர் சான்றிதழ் அடிப்படை பயிற்சி தருமபுரி ராமா போடிங் கே.ஆர்.கே. மஹால் வளாகத்தில் நடைபெற்றது.
தருமபுரி நகராட்சி, ஒன்றியம் மற்றும் பென்னாகரம் ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் திரு. நந்தகோபால் வரவேற்றார். தருமபுரி ஹோட்டல் மற்றும் பேக்கரி சங்க செயலாளர் திரு. வேணுகோபால், ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சரண்குமார், அருண் மற்றும் திருப்பதி உள்ளிட்டோர் முன்னிலையில் மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் மருத்துவர் கைலாஷ்குமார் தலைமையில் விழிப்புணர்வு மற்றும் உணவு பாதுகாப்பு மேற்பார்வையாளர் அடிப்படை பயிற்சி நடைபெற்றது.
மாவட்ட நியமன அலுவலர் கைலாஷ்குமார் தன் உரையில், உணவு பாதுகாப்பு உரிமம் மற்றும் பதிவு சான்றுகள் இல்லாமல் உணவுப் பொருட்கள், இனிப்பு, காரம் தயாரிப்பது மற்றும் விநியோகிப்பது, விற்பனை செய்வது சட்டப்படி குற்றமாகும் என தெரிவித்தார். அனைத்து உணவு வணிகர்கள், பேக்கரிகள், தயாரிப்பாளர்கள், விநியோகிப்பாளர்கள், விற்பனையாளர்கள் தற்காலிகமாகவோ, நிரந்தரமாகவோ வணிகம் செய்வதற்கு முன் உணவு பாதுகாப்பு துறை அனுமதி பெற்று உரிய உரிமச் சான்றிதழ் பெற வேண்டும் என்றும், சுத்தம், சுற்றுச்சூழல் பராமரிப்பு, தரமான மூலப்பொருட்கள், காலாவதி பொருட்கள் சரிபார்த்தல் போன்றவை அவசியம் என்றும் அறிவுறுத்தினார்.
மேலும், சமையல் எண்ணெயை மீண்டும் பயன்படுத்தக் கூடாது, பயன்படுத்திய எண்ணெயை உணவு பாதுகாப்பு துறையால் அங்கீகரிக்கப்பட்ட ரூகோ (RUCO – Reused Cooking Oil) முகவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார். உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால், உணவு பாக்கெட்டுகளில் காணப்பட வேண்டிய முக்கிய தகவல்கள் — தயாரிப்பு பெயர், முகவரி, தேதி, எடை, உரிமம் எண், சைவ/அசைவ குறியீடு, ஊட்டச்சத்து விவரங்கள் போன்றவற்றை விளக்கமாக கூறினார்.
பயிற்சி பார்ட்னர் காமேஷ் பூச்சி தடுப்பு வழிமுறைகள், சுத்தம் மற்றும் உணவு பாதுகாப்பு விதிமுறைகள் குறித்து பயிற்சி அளித்தார். நிகழ்வில் செயற்கை நிறமூட்டிகள் தொடர்பான விழிப்புணர்வும், உணவு பாதுகாப்பு புத்தகங்கள் மற்றும் பிரசுரங்களும் வழங்கப்பட்டன. தருமபுரி நகரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து 70க்கும் மேற்பட்ட இனிப்பு, காரம் தயாரிப்பு வணிகர்கள், பேக்கரி உரிமையாளர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி நிறைவில் ஹோட்டல் மற்றும் பேக்கரி சங்க செயலாளர் திரு. வேணுகோபால் நன்றி தெரிவித்தார்.