பாலக்கோடு, அக். 26 -
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே புலிகரை பகுதியில் வனவிலங்குகளின் மாமிசம் விற்பனை நடைபெறுவதாக வனசரக அலுவலர் கார்த்திகேயனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, வனத்துறை காவலர்கள் உடன் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சோதனை மேற்கொண்டபோது, புலிகரை அடுத்த கல்லாங்காட்டனூர் கிராமத்தில் மூவர் கம்பி வலை கூண்டில் காட்டு முயல்களை வைத்து விற்பனை செய்து கொண்டிருந்தது தெரியவந்தது.
வனக்காவலர்களை கண்டதும் மூவரும் தப்பி ஓட முயன்றனர். ஆனால் காவலர்கள் விரைந்து சுற்றிவளைத்து பிடித்து விசாரித்ததில்,
-
வளன் (39) – கல்லாங்காட்டனூர்
-
மைதீன் (33) – அரூர்
-
சக்திவேல் (33) – கானாப்பட்டி
என்ற மூவரும் அரூர் காப்புக்காட்டில் இருந்து அரசால் தடைசெய்யப்பட்ட வனவிலங்குகளை வேட்டையாடி விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. வனத்துறையினர் மூவரையும் கைது செய்து, இரும்பு கூண்டுடன் உயிருடன் இருந்த 9 முயல்களையும், இறந்த 1 முயலையும் பறிமுதல் செய்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்ட மூவரும் பாலக்கோடு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு தருமபுரி சிறையில் அடைக்கப்பட்டனர். வனத்துறை அதிகாரிகள் வனவிலங்குகளை வேட்டையாடுவது கடுமையான குற்றமாகும் என்றும், இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளனர்.

.jpg)