பாலக்கோடு, அக். 08 -
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளராக (DSP) இருந்து வந்த திரு. மனோகரன் அவர்கள் கிருஷ்ணகிரி மாவட்ட சமூக நீதி மற்றும் மனித உரிமை பிரிவு டி.எஸ்.பியாக பணிமாறுதல் பெற்றதைத் தொடர்ந்து, தருமபுரி மாவட்ட பெண்கள் குற்ற தடுப்பு பிரிவு டி.எஸ்.பியாக பணியாற்றி வந்த திரு. ராஜசுந்தர் அவர்கள் பாலக்கோடு உட்கோட்ட புதிய காவல் துணை கண்காணிப்பாளராக பொறுப்பேற்று கொண்டார்.
திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த திரு. ராஜசுந்தர் அவர்கள் காவல் துறையில் பல்வேறு மாவட்டங்களில் சிறப்பாக பணியாற்றிய அனுபவம் பெற்றவர் ஆவார். தற்போது பாலக்கோடு உட்கோட்டத்தின் 7வது துணை காவல் கண்காணிப்பாளராக பொறுப்பேற்றுள்ளார். பொறுப்பேற்பு நிகழ்வின் போது தொழிலதிபர்கள், போலீசார் மற்றும் பத்திரிகையாளர்கள் நேரில் சந்தித்து அவருக்கு மலர் மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.
அப்போது பேசிய டி.எஸ்.பி. ராஜசுந்தர் அவர்கள், “பாலக்கோட்டில் சட்டம் மற்றும் ஒழுங்கை நிலைநாட்டுவதற்கும், சட்டவிரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதற்கும் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். வரவிருக்கும் பண்டிகை நாட்களில் கடைவீதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் தடுக்கவும், பொதுமக்கள் போலீசாருக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.