தருமபுரி, செப்.30 –
அரசு தருமபுரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் இன்று உலக இதய தின விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ.சதீஸ், I.A.S. கொடியசைத்து துவக்கி வைத்தார்.
உலக இதய தினம் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் இதய ஆரோக்கியத்திற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் உலகளவில் கொண்டாடப்படுகிறது. இதய நோய்கள் மற்றும் மாரடைப்புகள் போன்ற பிரச்சனைகளை தடுப்பதற்கான நடவடிக்கைகள், சரியான வாழ்க்கை முறைகள் மற்றும் உணவுக்குறிப்புகள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.
இதய ஆரோக்கியம் மனித உடலின் முக்கிய பகுதியாகும். இதய செயலிழப்பு மரணத்திற்கு வழிவகுக்கும் என்பதால் ஒவ்வொருவரும் இதய ஆரோக்கியத்தை கவனிக்க வேண்டும். மாரடைப்பு, பக்கவாதம் மற்றும் இதய நோய் போன்றவை இருதய கோளாறுகளால் ஏற்படும் முக்கியமான இறப்புக்காரணங்களில் அடங்கும். இதய ஆரோக்கிய உணவுக்குறிப்புகள்: அதிக பழங்கள் மற்றும் காய்கறிகள், குறைந்த கொழுப்பு, குறைந்த உப்பு, அதிக நார்ச்சத்து ஆகியவை உட்கொள்வது. இதய நோய்களை தடுப்பதற்காக இரத்த அழுத்தம் மற்றும் இரத்த சர்க்கரையை கண்காணித்து, மருத்துவரின் ஆலோசனையைப் பெறுதல் மிகவும் அவசியம்.
இந்நிகழ்ச்சியில் 100க்கும் மேற்பட்ட ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் பணியாளர்கள் மற்றும் மருத்துவர்கள் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி, பொதுமக்களை ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்ற ஊக்குவித்தனர்.
பேரணியில் தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் திரு. எஸ்.பி. வெங்கடேஸ்வரன், அரசு தருமபுரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு. மனோகர், உள்ளிருப்பு மருத்துவர் மரு. நாகேந்திரன், மருத்துவர் மரு. ரமேஷ், மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் மருத்துவ அதிகாரிகள், பொதுமக்களுக்கு இதய நோய் விழிப்புணர்வு, தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் ஆரோக்கிய உணவுக் குறிப்புகள் குறித்து விளக்கி, விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.