பென்னாகரம், அக். 26 -
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம், நாகமரை காவிரி ஆற்றங்கரை அருகே, சுமார் 2500 முதல் 3500 ஆண்டுகளுக்கு முந்தைய இரும்புக்கற்காலத்தைச் சேர்ந்த வெண்சாந்து பாறை ஓவியம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
வரலாற்றுச் சின்னங்கள் நிறைந்த தருமபுரி மாவட்டத்தில், இதுவரை ஆவணப்படுத்தப்படாத பல முக்கிய தொல்லியல் சுவடுகள் இன்னும் மறைந்தே உள்ளன. இவற்றை ஆராயும் பணியில் “பென்னாகரம் வரலாற்று மையம்” என்ற அமைப்பு அரசு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் வரலாற்று ஆர்வலர்களுடன் இணைந்து தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
ஏரியூர் ஒன்றியத்தைச் சேர்ந்த நாகமரை காவிரி ஆற்றுப்படுக்கை மணிக்காரன் கொட்டாய்க்கு அடுத்த பூதிகுண்டு பகுதியில், பெரும் கற்கால பாறை ஓவியங்கள் இருப்பதாக இராமகொண்டஅள்ளி அரசு மேல்நிலைப்பள்ளி 9-ம் வகுப்பு மாணவர்கள் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து, பென்னாகரம் வரலாற்று மைய ஒருங்கிணைப்பாளர் பெருமாள், கோவிந்தசாமி, தமிழாசிரியர் சுப்பிரமணி, ஆசிரியர்கள் சந்தோஷ்குமார், தாமோதரன், திருப்பதி, முருகா, கணேசன், அபில் தேவ் உள்ளிட்டோர் அப்பகுதியில் கள ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, “பூதிகுண்டு” என்ற இடத்தில் இயற்கையாக அமைந்த குன்றின் குகை வடிவ மேற்பகுதியில், வெண்சாந்து மூலம் வரையப்பட்ட பாறை ஓவியங்கள் இருப்பது கண்டறியப்பட்டது.
இதைப் பற்றி தருமபுரி மாவட்ட தொல்லியல் அலுவலர் திரு. பரந்தாமன் கூறியதாவது:
“இங்கு காணப்படும் வெண்சாந்து பாறை ஓவியங்கள் பெருங்கற்காலத்தைச் சார்ந்தவை. சுமார் 2500 முதல் 3500 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் இவை வரைந்திருக்கலாம். நான்கு ஓவியங்களில் இரண்டு பெரிய அளவில் காணப்படுகின்றன. அவை இறந்த இனக்குழுத் தலைவரை வணங்குவதற்காக வரைந்ததாக இருக்கலாம். மற்ற இரண்டு ஓவியங்கள் சிறிய அளவில் தட்டையான வடிவில் உள்ளன,” என்றார்.
மேலும், இப்பகுதி சுற்றிலும் சுமார் இரண்டு கிலோமீட்டர் வரை தூரத்தில், கல் ஆயுதங்கள், கல்வட்டங்கள், இரும்பு உருக்கிய கசடுகள், கருப்பு மற்றும் சிவப்பு பாணை ஓடுகள் போன்றவை கண்டறியப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
தருமபுரி மாவட்டம் நாகமரை பகுதியில் கிடைத்த இந்த புதிய பெருங்கற்கால பாறை ஓவியம், தமிழ்நாட்டின் வரலாற்று ஆய்வில் முக்கியமான புதிய பக்கத்தைச் சேர்த்துள்ளது.

.jpg)