தருமபுரி, அக். 18, 2025
தருமபுரி BSNL அலுவலகம் எதிரில் உள்ள பாரதிபுரம் 66 அடி சாலை, பொதுமக்கள் 24 மணி நேரமும் பயன்படுத்தும் முக்கிய சாலையாகும். அரசு போக்குவரத்து கழக பேருந்து நிலையத்தையும் இணைக்கும் இந்த நெடுஞ்சாலை வளைவில் சுமார் அரை அடி ஆழமான பள்ளம் ஏற்பட்டிருந்தது. இதனால் வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்பட்டதுடன், விபத்து அபாயமும் இருந்து வந்தது.
இந்த நிலையை கவனித்த மை தருமபுரி அமைப்பினர், தங்களது சாலை பாதுகாப்பு சேவை திட்டத்தின் கீழ் சாலை சீரமைப்பு பணிகளை மேற்கொண்டனர். சாலையை சமநிலைப்படுத்தி, விபத்து ஏற்படாத வகையில் சரி செய்யும் பணிகள் நிறைவேற்றப்பட்டன.
இந்த பணியில் மை தருமபுரி அமைப்பின் நிறுவனர் சதீஸ் குமார் ராஜா, செயலாளர் முனைவர் தமிழ்செல்வன், சாலை பாதுகாப்பு சேவை திட்ட பொறுப்பாளர் ர. கோகுல்ராஜ், அமைப்பாளர் அ. சையத் ஜாபர், தன்னார்வலர் சக்திவேல் ஆகியோர் இணைந்து பங்கேற்று சமூக நலன் கருதி பணிகளை நிறைவேற்றினர்.