பாலக்கோடு, அக்டோபர் 04, 2025:
தருமபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி பகுதியில் சொகுசு காரில் குட்கா பொருட்கள் கடத்தல் நடந்ததாக போலீசாருக்கு இரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து மாரண்டஅள்ளி இன்ஸ்பெக்டர் வெங்கட்ராமன் தலைமையில், போலீசார் மாரண்டஅள்ளி–வெள்ளிசந்தை நெடுஞ்சாலையில், சாமியார் தோட்டம் முனியப்பன் கோயில் அருகே தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது சந்தேகத்திற்கிடமாக வந்த சொகுசு காரை நிறுத்தி சோதனை செய்தபோது, 20-க்கும் மேற்பட்ட சாக்கு மூட்டைகளில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 263 கிலோ குட்கா பொருட்கள் கடத்தி வந்தது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ. 1 லட்சத்து 83 ஆயிரம் என போலீசார் தெரிவித்தனர். விசாரணையில் ராஜஸ்தான் மாநிலம் கதர்டாபீர் கிராமத்தை சேர்ந்த பிரகாஷ்குமார் (25) என்பவர் குட்காவை திருப்பூருக்கு கடத்திச் சென்றதாக தெரியவந்தது.
போலீசார் குட்கா மூட்டைகளையும், கடத்தலுக்கு பயன்படுத்திய ரூ.2 லட்சம் மதிப்புள்ள சொகுசு காரையும் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து மாரண்டஅள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து, பிரகாஷ்குமாரை கைது செய்து தருமபுரி சிறையில் அடைத்தனர்.

