பாப்பிரெட்டிப்பட்டி. அக்.21 -
தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், B. பள்ளிப்பட்டி அருகே உள்ள லூர்துபுரம் பகுதியில் மக்கள் சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக அரசு புறம்போக்கு நிலம் (சர்வே எண் 123/3) வழியாக தங்கள் வீடுகளுக்கு சென்று வருகின்றனர். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக அந்த வழியில் காம்பவுண்ட் சுவர் கட்டப்பட்டு இரண்டு கேட் வைக்கப்பட்டதால் மக்கள் அப்பாதையை மட்டுமே நம்பி இயங்கி வருகின்றனர்.
அப்பகுதி மக்கள் கூறுகையில், “இந்த வழி வழியாகவே மாணவர்கள் பள்ளி, கல்லூரி செல்வதோடு, முதியோர்கள் தினசரி பணிகளுக்கும் பயணம் செய்கின்றனர். ஆனால், தற்போது பங்குத்தந்தை அருள்ஜோதி அவர்கள், சில நபர்களுடன் இணைந்து அந்த வழியை அடைக்க முயற்சி செய்து வருகிறார். இதனால் எங்களுக்கு மாற்று வழி கிடையாது” என தெரிவித்தனர்.
மக்கள் மேலும் கூறுகையில், “முன்னர் எந்தப் பங்குத்தந்தையரும் ஊர் வழக்கங்களில் தலையிடவில்லை. ஆனால் புதிய பங்குத்தந்தை அருள்ஜோதி ஊர் பாரம்பரிய பங்கு குழுவை புறக்கணித்து தனியாக குழுவை அமைத்துள்ளார். இதனால் ஊர் மக்களிடையே பிரச்சனைகள் உருவாகியுள்ளன. பொதுமக்கள் சார்பில் காவல்நிலையத்தில் புகார் மனு அளித்தபோது, போலீசார் இரு தரப்பினரையும் சமரசப்படுத்தி அனுப்பினர். ஆனால், மறுநாளே காம்பவுண்ட் சுவர் கட்டும் முயற்சி மீண்டும் மேற்கொள்ளப்பட்டது,” என்றனர்.
இந்த நிலையில், “வழித்தடம் அடைக்கப்பட்டால் மெயின் ரோட்டை அடைய மக்கள் ஊரை முழுமையாகச் சுற்றி செல்ல வேண்டிய நிலை ஏற்படும். இது முதியோர்களுக்கும், குழந்தைகளுக்கும் கடும் சிரமத்தை ஏற்படுத்தும். எனவே, இந்த ஆக்கிரமிப்பு அகற்றி சாலை வசதியை நிரந்தரமாக ஏற்படுத்த வேண்டும்” என லூர்துபுரம் மக்கள், முதியோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் இணைந்து தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.